பூஸா சிறையிலிருந்து ‘வட்ஸ்அப்’ டீலிங்: பொலிஸாரின் அதிரடி வலையில் சிக்கிய போதைப்பொருள் கும்பல்!

பூஸா சிறையிலிருந்து ‘வட்ஸ்அப்’ டீலிங்: பொலிஸாரின் அதிரடி வலையில் சிக்கிய போதைப்பொருள் கும்பல்!

பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையிலிருந்து இயக்கப்பட்ட பாரிய போதைப்பொருள் வலையமைப்பை கிரிபத்கொட பொலிஸார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். சிறையிலிருக்கும் ‘அமல் ராஜ்’ என்பவரே வட்ஸ்அப் (WhatsApp) ஊடாக இந்தத் வலையமைப்பை வழிநடத்தி வந்துள்ளமை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சம்பவம் என்ன? கிரிபத்கொட பிரதேசத்திலுள்ள உணவகமொன்றில் ஹெரோயினுடன் தம்பதியினர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறைச்சாலையிலுள்ள அமல் ராஜ் என்பவரின் வழிகாட்டலிலேயே தாம் செயல்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் ஒரு நாடகத்தை அரங்கேற்றினர். கைது செய்யப்பட்ட பெண்ணை வைத்தே அமல் ராஜுக்கு போன் செய்து, “பெரிய சரக்கில் 25 கிராம் வேண்டும்” எனக் கேட்க வைததனர். இதற்கு சம்மதித்த அமல் ராஜ், அவர்களை கொட்டாஞ்சேனைக்கு வருமாறு கூறியுள்ளார்.

உளவுத்துறை அதிகாரியும், அந்தத் தம்பதியினருடன் முச்சக்கர வண்டியில் கொட்டாஞ்சேனைக்குச் சென்றனர். அங்கு சென்றதும், அவர்கள் வந்த முச்சக்கர வண்டி மற்றும் இடத்தின் புகைப்படங்களை வட்ஸ்அப்பில் அனுப்புமாறு அமல் ராஜ் கேட்டுள்ளார். புகைப்படங்களை உறுதி செய்த பின்னர், அங்கு வந்த நபர் ஒருவர் உளவுத்துறை அதிகாரியிடமே போதைப்பொருளைக் கையளித்தபோது, பொலிஸார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

கைப்பற்றப்பட்டவை கைது செய்யப்பட்டவர் ‘ஸ்டீவன் ராஜ்’ என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆட்டுப்பட்டித்தெருவில் இவர் தங்கியிருந்த அறையைச் சோதனையிட்டபோது, 600 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், 5,400 வெளிநாட்டு சிகரெட்டுகள், 68,000 ரூபா பணம் மற்றும் வங்கியில் 4 இலட்சம் ரூபா வைப்பிலிட்டதற்கான பற்றுச்சீட்டுகளும் சிக்கின.

இந்த வலையமைப்புடன் தொடர்புடைய மற்றுமொருவர் தப்பியோடியுள்ள நிலையில், அவரைக் கைது செய்ய மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

Recommended For You

About the Author: admin