ரணில் சிக்கலில்? மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்கு அரச பணம் – லண்டன் வரை சென்ற விசாரணை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகப் பிரித்தானியா சென்ற போது, சுமார் 1 கோடியே 66 இலட்சம் ரூபாய் (16.6 மில்லியன்) அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது.
இதுவரை சுமார் 50 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
லண்டனில் விசாரணை
விசாரணையின் ஒரு பகுதியாகப் பிரித்தானியா சென்றுள்ள விசேட பொலிஸ் குழு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் 4 ஊழியர்களிடம் இந்த வாரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது. இந்தக் குழு நாளை நாடு திரும்பவுள்ளதுடன், வந்த கையோடு விசாரணை அறிக்கையையும் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ரணில் விக்ரமசிங்கவின் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழு, சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவைச் சந்தித்து விசாரணை நிலவரம் குறித்துக் கேட்டறிந்தது.
அதற்குப் பதிலளித்த சட்டமா அதிபர், “லண்டன் சென்ற CID குழு திரும்பிய பின்னரே விசாரணை குறித்த தெளிவான விபரங்களைக் கூற முடியும்,” எனத் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

