இனவாதத்தை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்குவோம்: ஜனாதிபதியிடம் மனோ கணேசன் உறுதி!
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கும், தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
நாட்டிலிருந்து இனவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கும், “இலங்கையர் தினத்தை” முன்னெடுப்பதற்கும் சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி இந்தச் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
மனோ கணேசனின் வலியுறுத்தல்
இச்சந்திப்பில் கருத்துத் தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், “இனவாதத்தை ஒழிப்பதற்கான ஜனாதிபதியின் முயற்சிக்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். எனினும், நாட்டில் வாழும் அனைத்து மக்களின் இனம், மதம் மற்றும் மொழி ரீதியான தனித்துவங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு சமாந்திரமாகவே ‘இலங்கையர்’ என்ற பொதுவான அடையாளம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அனைத்து தரப்பினருக்கும் இடையில் உரிமைகளின் சமத்துவம் இருப்பதே முக்கியம்,” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்ததாகக் குறிப்பிடுகிறார்.
மேலும், உத்தேசிக்கப்பட்டுள்ள ‘இலங்கையர் தின’ கொண்டாட்டங்களில், நாட்டின் பன்மைத்துவத்தை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கிய ஊர்வலங்களை நடத்த வேண்டும் எனவும் அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்தச் சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மனோ கணேசனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரமும் மேலும் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகளின் எம்பிக்கள் பலரும் கலந்துகொண்டனர்.


