யாழ் நல்லூரில் உணர்வுபூர்வமாக மாவீரர் வாரம் ஆரம்பம்! மாவீரர் கல்வெட்டு திறப்பு!
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் தியாகச் சுடர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று (நவம்பர் 21, வெள்ளி) யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பமானது.
இதையொட்டி, யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக, போராட்டத்தில் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று இன்று மாலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
பெற்றோரின் பங்கேற்புடன் கண்ணீர்ப்பூ அஞ்சலி
இந்த நெகிழ்ச்சியான நிகழ்வின் பொதுச் சுடரை, மாவீரர் ஒருவரின் உறவினர் ஏற்றி வைத்து, தியாக மைந்தர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த பலரும் கண்கலங்க மலர்களைச் சமர்ப்பித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்தத் தியாக நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த முன்னாள் போராளிகள், அரசியல் பிரதிநிதிகள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மாவீரர்களின் நினைவைப் போற்றினர்.


