மீடியாகொட துப்பாக்கிச் சூடு: மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு..!
மீடியாகொட , கிரலகஹவெல சந்தியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளை பத்தேகம பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
பத்தேகம பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, படபொல – பத்தேகம வீதியில் அம்பேகம அம்பலத்திற்கு அருகில் கைவிடப்பட்டிருந்த குறித்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டதாக ‘அத தெரண’ செய்தியாளர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீடியாகொட, அலுத்வல ஊடாக பத்தேகம நோக்கிப் பயணிக்கும்போது மோட்டார் சைக்கிளை வழியில் விட்டுச் சென்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 3 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
மீடியாகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் சம்பந்தப்பட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப். யூ. வுட்லர் தெரிவித்தார்.
மீடியாகொட, கிரலகஹவெல பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் உணவகத்தின் காசாளராகக் கடமையாற்றிய பெண் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அப்பெண் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் மீடியாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்காக பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகப் பொலிஸார் சந்தேகிப்பதுடன், இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாகவே இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

