வாகன விபத்துக்களில் இருவர் பலி..!
மட்டக்களப்பு – கல்முனை வீதியில் ஆரையம்பதிப் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
மட்டக்களப்பு திசை நோக்கி பயணித்த லொறி ஒன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த பாதசாரி சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத போதிலும், அவர் அப்பகுதியில் இருந்த யாசகர் எனத் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநேரம் பல்லேபொல – மடவளை வீதியில் நாரங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
பல்லேபொலை திசையிலிருந்து மடவளை திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அதற்கு எதிர்த்திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இரண்டு மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களும் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் வம்பட்டுயாய, நாலந்த பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.
மஹவெல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

