கிணற்றில் குளிக்கச் சென்ற 18 வயது சிறுவன் சடலமாக மீட்பு!
வல்வெட்டித்துறை:
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறைப் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் குளிக்கச் சென்ற 18 வயதுடைய நிரேக்சன் என்ற சிறுவன் இன்று (வியாழக்கிழமை) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று நண்பகல், ஐவர் கொண்ட சிறுவர் குழு ஒன்று குறித்த தோட்டக் கிணற்றில் கயிறு கட்டி நீராடியுள்ளனர். ஏனைய சிறுவர்கள் வெளியேறிய பின்னர், நிரேக்சன் மட்டும் தொடர்ந்து நீராடிக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட நேரமாகியும் அவரைக் காணாத நிலையில், ஏனைய சிறுவர்கள் மீண்டும் சென்று தேடியபோது, கிணற்றில் கட்டியிருந்த கயிறு அறுந்த நிலையில், நிரேக்சனை அங்கு காணவில்லை.
உடனடியாகப் பிரதேசவாசிகளின் உதவியுடன் கிணற்றில் தேடியபோது, சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் தொடர்பான மரண விசாரணையை கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே. பாஸ்கரன் மேற்கொண்டார். உயிரிழந்த சிறுவனின் சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வல்வெட்டித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

