வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் பாதுகாப்புத் தரப்பு -மறுத்தது அநுர அரசு..!

வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் பாதுகாப்புத் தரப்பு -மறுத்தது அநுர அரசு..!

வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் ஈடுபடவில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரால் (ஓய்வு நிலை) அருணஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், காவல்துறையினரும் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிடுகிறார்.

அவ்வாறு முறையற்ற வகையில் செயற்படும் இராணுவத்தினர், காவல்துறையினர் யார், அவர்களின் சேவை பிரதேசம் தொடர்பான விபரங்களை அவர் வெளிப்படுத்த வேண்டும்.

அவ்வாறு குறிப்பிட்டால் ஆராய்ந்து பார்ப்போம். இவர் குறிப்பிடுவதை போன்று பாதுகாப்பு தரப்பினர் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்பு படவில்லை.

கடந்த காலங்களில் அரசாங்கங்கள் எடுத்த தவறான தீர்மானங்களினால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள். அரச நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டதால் நாடும் வங்குரோத்து நிலையடைந்தது.

தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறந்த முறையில் செயற்படுத்தி வருகிறது.

எதிர்க்கட்சியினர் தான் கலக்கமடைந்து போலியான குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த கால அரசாங்கங்கள் பிணைமுறி மோசடி, தேங்காய் எண்ணெய் மோசடி, சீனி மோசடி, வெள்ளைப் பூண்டு உட்பட பாரதூரமான மோசடிகளால் தான் பிரபல்யமடைந்தன.

பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தை தயாரித்துள்ளோம்.

நிதி ஒழுக்கம் தற்போது கடுமையான முறையில் பேணப்படுகிறது. கடந்த காலங்களை போன்று முறையற்ற வகையில் வரவு – செலவுத் திட்டத்தை தயாரிக்கவில்லை.

மக்களுக்கு போலியான நிவாரணங்களை வழங்கும் வாக்குறுதிகளை வழங்கவில்லை. மக்களுக்கு சாதகமான முறையில் தான்இந்த வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

Recommended For You

About the Author: admin