மட்டக்களப்பில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி பெண் சட்டத்தரணி கைது!

மட்டக்களப்பில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி பெண் சட்டத்தரணி கைது!

இன்னொரு செவ்வந்தி பாணி நாடகம் ?

சட்டத்தரணிகள் அணியும் ஆடையை அணிந்து, மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்து, பொதுமக்களிடம் பல இலட்சம் ரூபாயை மோசடி செய்ததுடன், உண்மையான சட்டத்தரணிகளையும் ஏமாற்றி வந்த ஒரு போலி சட்டத்தரணி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதிமன்றத் தொகுதியில் நடைபெற்ற கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துக்காக செவ்வந்தி இதேபோல போலி வேடம் அணிந்த சம்பவத்தை இது ஞாபகப்படுத்தியிருக்கிறது.

 

சட்டத்துறையை அவமதிக்கும் வகையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக, ஒந்தாச்சி மடத்தில் வைத்து குறித்த நபர் நேற்று சனிக்கிழமை (நவம்பர் 08) கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

மோசடியின் பின்னணி:

இந்த போலி சட்டத்தரணியின் மோசடி குறித்த மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, தனது வீட்டில் நடந்த தங்க ஆபரணங்கள் திருட்டு வழக்கில், நீதிமன்றத்தில் உள்ள நகைகளைப் பெறுவதற்காக ஒரு திறமையான சட்டத்தரணியை தேடியுள்ளார்.

 

அப்போது, அந்தப் பெண்ணுக்கு அறிமுகமான ஒருவர், இப்போலி சட்டத்தரணியின் தொலைபேசி இலக்கத்தை வழங்கியுள்ளார். பெண்ணைத் தொடர்புகொண்ட போலி சட்டத்தரணி, தான் கொழும்பு உயர் நீதிமன்ற சட்டத்தரணி என்று கூறி அறிமுகப்படுத்தியுள்ளதுடன், “மிக விரைவில் நகைகளை மீட்க, நீதிமன்றத்தில் உள்ள சிலருக்கு பணம் வழங்க வேண்டும்” எனக் கூறி வழக்குத் தொகையாக இரண்டு இலட்சம் ரூபாயை கோரியுள்ளார்.

 

அந்தப் பெண் அதற்கு சம்மதித்து முற்பணமாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளார். இதையடுத்து, சில நாட்களில், வழக்கிற்கு நீதிமன்றத்துக்கு வருமாறு அவருக்குக் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. இதைப் பயன்படுத்தி, “நான் முன்நகர்வு பத்திரம் தாக்கல் செய்ததால் தான் உங்களுக்கு விரைவாக கடிதம் வந்துள்ளது” என்று நம்ப வைத்து அப்பெண்ணை மேலும் ஏமாற்றியுள்ளார்.

 

உண்மையான சட்டத்தரணிகளை ஏமாற்றும் முயற்சி:

இதேபோல, மட்டக்களப்பு நீதிமன்றத்திலுள்ள மற்றொரு சட்டத்தரணியுடன் தொடர்புகொண்ட இந்தப் போலி நபர், தன்னை கொழும்பு உயர் நீதிமன்ற சட்டத்தரணி என அறிமுகப்படுத்தியுள்ளதுடன், “எனக்கு கல்முனை, திருகோணமலை போன்ற பகுதிகளில் வழக்குகள் இருப்பதால், எனது ஒரு வாடிக்கையாளரின் வழக்கை நீங்கள் எடுத்து நடாத்த முடியுமா?” எனக் கோரியுள்ளார்.

 

அவ்வாறே, இந்தப் போலி சட்டத்தரணியின் பல வாடிக்கையாளர்களை பல உண்மையான சட்டத்தரணிகளுக்கு இவர் அறிமுகப்படுத்தியுள்ளார். அவர்களிடம் தனது சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகள் என மற்றவர்களைக் காட்டி, வழக்குத் தொகையாக பல இலட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு மோசடி செய்து வந்துள்ளார்.

 

மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவம்:

சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) வழக்கு விசாரணைக்காக போலி சட்டத்தரணியும் குறித்த பெண்ணும் நீதிமன்றம் சென்றுள்ளனர்.

 

அப்போது, வழக்கில் ஏற்கெனவே ஆஜராகியிருந்த சட்டத்தரணி ஒருவருக்கு, இந்தப் போலி நபர் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர், போலி சட்டத்தரணியை நீதிமன்றப் பதிவாளர் காரியாலயத்திற்கு அழைத்துச் சென்று சட்டத்தரணி தானா என்று உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளார்.

 

பதிவாளர் அடையாள அட்டையைக் கோரியபோது, “அது தனது வாகனத்தில் உள்ளது, எடுத்துக்கொண்டு வருகிறேன்” எனக் கூறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் போலி சட்டத்தரணி.

 

இது குறித்து நீதவானின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, காவல்துறையினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், குறித்த போலி சட்டத்தரணியை நேற்று சனிக்கிழமை இரவு ஒந்தாச்சி மடத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து காவல்துறை கைது செய்தது.

 

கைப்பற்றப்பட்டவை:

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சட்டத்தரணி போல நீதிமன்றத்திற்குள் நுழைந்து தனது வாகனத்தை சட்டத்தரணிகள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி நடமாடி வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியிடம் இருந்து:

 

சட்டத்தரணி என அடையாளப்படுத்தும் போலி வருகை அட்டை.

 

போலி இறப்பர் முத்திரை.

 

வாகனத்தில் ஒட்டப்படும் சட்டத்தரணி ஸ்டிக்கர்.

 

கறுப்பு கழுத்துப்பட்டி, கோட் சூட்.

 

வழக்குகளைக் கொண்ட 16 கோப்புகள்.

 

போன்றவை மீட்கப்பட்டுள்ளன.

 

அவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin