2 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாடசாலை அதிபர், மகன் கைது: அனுராதபுரத்தில் அதிர்ச்சி!
அனுராதபுரம்: அனுராதபுரம், எப்பாவல பிரதேசத்தில் சுமார் 20 மில்லியன் ரூபாய்க்கும் (இரண்டு கோடி) அதிகமான பெறுமதியுடைய ஹெரோயினுடன் பாடசாலை அதிபர் ஒருவரும், அவரது 22 வயது மகனும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
எப்பாவலப் பகுதியில் திடீரென மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே, குறித்த இருவரும் ஓர் உணவகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாரிய அளவிலான போதைப்பொருட்களுடன் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் நீண்டகாலமாக அப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பாடசாலை அதிபர் ஒருவர் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபட்டமை காரணமாக அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளையில் இந்த அதிபர் அண்மையில் பேலியகோடை நகரசபை உறுப்பினராக தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பாகத் தெரிவுசெய்யப்பட்ட ஒருவரின் கணவர் என்று பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

