அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்..! 

அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்..!

யாழ்ப்பாண மாவட்டதில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில்

இன்றைய தினம் (04.11.2025) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ கருணநாதன் இளங்குமரன், கௌரவ ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் பங்குபற்றினார்கள்.

இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய கெளரவ அமைச்சர் அவர்கள், கடந்த வருட திட்டங்கள் தொடர்பாக மீளாய்வு செய்ய வேண்டிய போது குறைபாடுகள் இருப்பின் நிவர்த்தி செய்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும், பிரதேச செயலாளர்கள் தமது பிரதேச செயலகத்திற்குரிய அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுமாறும் கோரினார். மேலும், இவ்வாண்டுக்குரிய தி்ட்டங்களை சரியாக நிறைவேற்றி முடிப்பதன் ஊடாக அடுத்த வருட அபிவிருத்தித் திட்டங்களுக்கு கூடுதலான நிதியைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும், அந் நிதியை மீண்டும் மக்களுக்கு பயன்படுத்துவதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் எனவும் கெளரவ அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் இம் முறை அரச ஊழியர் சம்பளம் அதிகரிப்பு, ஆளணி பற்றாக்குறை என்பவற்றை நிறைவேற்றுவதுடன், அமைச்சரவை கூட்டத்தில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளதாகவும், மேலும் கல்விச் சீர்திருத்தத்தில் கூடுதலான மாற்றங்களை கொண்டு வர வேண்டி உள்ளதாகவும், காணி தொடர்பான பிரச்சனை, போதைப் பொருள் பாவனை, ஏனைய சமூக விரோத பிரச்சினைகள் தொடர்பாகவும் துரிதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், மாணவ சமூகத்தை பாதிப்புக்குள்ளாகும் போதைப் பொருள் பாவனையினை முற்றாக ஒழிக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக, பிரதேச செயலாளர்கள் கிராம மட்டங்களில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டி அதற்குரிய முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒத்துழைப்புகளை வழங்குமாறும் கெளரவ அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், கூட்டத்திற்கு வருகைதந்த கெளரவ அமைச்சர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களை வரவேற்றதுடன், அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் கொள்வனவு நடைமுறைகளினால் காலதாமதங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள், வீதி அபிவிருத்தி திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பன இவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டிய நிலையில் காணப்படுவதனால் குறிக்கப்பட்ட கால அவகாசம் கொள்வனவு நடைமுறைகளுக்காக தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் போது மிகப்பெரிய சவால்களை தீவகப் பிரதேசங்கள் எதிர்கொள்வதாகவும், அரச அதிகாரிகள் என்ற ரீதியில் நாங்கள் அனைவரும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் 99% வீதமான உத்தியோகத்தர்கள் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ரீதியில் எமக்கு எல்லோருக்கும் கூடுதலான அக்கறையும் பொறுப்பும் இருப்பதாகவும், நாம் அனைவரும் இயன்றளவு இத் திட்டங்களை மிக விரைவாக டிசம்பர் மாதத்திற்குள் நிறைவேற்றி முடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டதுடன், மாவட்ட அபிவிருத்தி திட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் இத் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியும் என்றும் கூறினார். மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திடம் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தவுள்ள திட்டங்களுக்கான முன்மொழிவுகளை சாத்தியப்பாடுகளுடன் தயார்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்ட அரசாங்க அதிபர், எதிர்வரும் பருவப்பெயற்சி காலத்தில் ஏற்படும் மழை வீழ்ச்சியினால் சவால்கள் காணப்பட்டாலும் உரிய வேலைத்திட்டங்களை நாம் உரிய காலத்தில் நிறைவேற்ற அனைவரினதும் ஒத்துழைப்பினையும் நல்குமாறும் கேட்டுக்கொண்டார்.

யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், மாவட்ட அபிவிருத்தித்திட்டம், கிராமிய அபிவிருத்தி, வாழ்வாதார கிராமிய அபிவிருத்தித்திட்டம், வீதி அபிவிருத்தி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடமைப்பு, தேசிய ஒருமைப்பாட்டினை மேம்படுத்தும் கருத்திட்டங்கள், நகர அபிவிருத்தித்திட்டம் ஆகிய திட்டங்களின் முடிவுறுத்திய,முடிவுறத்தாத திட்டங்கள் தொடர்பாக கௌரவ அமைச்சர் தலைமையில் ஆராயப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர், கட்டடங்கள் திணைக்கள பொறியியலாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட, பிரதேச செயலக பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin