விவசாயத்துறை அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்..!

வடக்கு மாகாணத்தில் நிலையான விவசாய மேம்பாட்டை உள்ளடக்கிய நிலையான பொருளாதார வளர்ச்சியை நோக்கமாக கொண்டு இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா உயர் ஸ்தானிகராலயம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த கலந்துரையாடல் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான கனடா உயர் ஸ்தானிகர் கெளரவ இசபெல் மார்ட்டின் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (31.10.2025)காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் வடக்கு மாகாணத்தில் விவசாய துறை எதிர்கொள்ளும் சவால்கள் குறிப்பாக களஞ்சிய வசதி குறைபாடுகள், போக்குவரத்து வசதியீனங்கள்,வடக்கு மாகாண விவசாய துறைசார் நிறுவன கொள்கைகள், அவற்றிற்கிடையிலான இடைவெளிகள்,விவசாய உற்பத்திகளை புதிய பரிமாணத்துடன் எவ்வாறு வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி வாய்ப்புக்கள், நீண்ட காலத்தை நோக்கிய முதலீடுகள்,
கனடா நாட்டுக்கு விவசாய உற்பத்தி ஏற்றுமதிகள் மற்றும் விவசாய துறையில் நவீன தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் துறைசார்ந்த அதிகாரிகளால் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், விவசாய கொள்கைகள், திறன் மேம்பாடு மற்றும் கனேடிய நிபுணத்துவம் மற்றும் கூட்டாண்மை உள்ளிட்ட மூலோபாய முதலீடுகள் வடக்கு மாகாணத்தை உள்ளடக்கிய காலநிலை மாற்றங்களின் போது விவசாய மேம்பாட்டை எவ்வாறு முன்னெடுத்தல் என்பது தொடர்பாக ஆராயப்பட்டது.

இக் கலந்துரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர் ,வடக்கு மாகாண சபை விவசாய துறைசாந்த திணைக்கள தலைவர்கள், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழக துறைசாந்த சிரேஷ்ட விரிவுரையாளர்கள், இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான கனடா உயர் ஸ்தானிகர அதிகாரிகள், பனை அபிவிருத்தி சபை திணைக்கள தலைவர்கள், world vision அமைப்பின் அதிகாரிகள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: admin