முக்கிய அறிவிப்பு – இந்திய விசா சேவைகள்: நவம்பர் 03 ஆம் திகதி முதல் புதிய மாற்றம் !!
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், எதிர்வரும் நவம்பர் 03 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நாட்டின் அனைத்து விசா விண்ணப்பம் மற்றும் அது தொடர்பான சேவைகளையும் நேரடியாகக் கையாளவுள்ளதாக இன்று (அக்டோபர் 30, 2025) அறிவித்துள்ளது.
வெளிப்புற சேவை வழங்குநரின் ஒப்பந்தம் நிறைவு
இதுவரை இந்திய விசாக்களைப் பெற்றுக்கொடுக்கும் வெளிப்புறச் சேவை வழங்குநராகச் செயற்பட்டு வந்த ஐ.வி.எஸ். லங்கா நிறுவனத்தின் (IVS Lanka) சேவைகள், எதிர்வரும் அக்டோபர் 31 ஆம் திகதியுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகின்றன. குறித்த சேவை வழங்குநருடனான ஒப்பந்தக் காலம் முடிவடைவதே இந்த மாற்றத்திற்குக் காரணம் என்று இந்திய உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.
தற்காலிக ஏற்பாடு மற்றும் புதிய மையங்கள்
இந்த ஒப்பந்த நிறைவைத் தொடர்ந்து, விசாச் செயற்பாடுகளைத் தடையின்றி வழங்குவதற்காக ஒரு தற்காலிக ஏற்பாடாக இந்திய உயர்ஸ்தானிகரகம் மற்றும் அதன் கிளை அலுவலகங்களில் நேரடியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதன்படி, நவம்பர் 03 ஆம் திகதி முதல் பொதுமக்கள் அனைத்து விதமான விசா மற்றும் உயர்ஸ்தானிகரக சேவைகளைப் பின்வரும் மூன்று மையங்களில் நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்:
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம்.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகம்
கண்டியிலுள்ள உதவி உயர்ஸ்தானிகரகம்.
விசா விண்ணப்பதாரர்கள் இனிமேல் இந்த மையங்களில் நேரடியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, தமது சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்று உயர்ஸ்தானிகரகம் மேலும் அறிவித்துள்ளது.

