பிரான்சில் உணவு பொருள் கொள்வனவை தவிர்க்கும் மக்கள்

பிரான்ஸில் கடந்த சில நாட்களாக பணவீக்கம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மக்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலைமைக்கு மத்தியில் மக்கள் தங்கள் அன்றாட உணவு பொருட்கள் கொள்வனவு செய்வதனை குறைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸில் உணவுப் பணவீக்கம் சராசரி பணவீக்கத்தை விட அதிகமாக உள்ளதென இன்சியின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.

இறைச்சி விலை இந்த வருடம் ஜுலை மாதத்துடன் ஒப்பிடும் போது 8.8 சதவீதம் அதிகரித்துள்ளது. கோழி இறைச்சியின் விலை 14.6 சதவீதமா அதிகரித்துள்ள நிலையில், மாட்டிறைச்சியின் விலை 10.2 சதவீதம் உயர்ந்துள்ளது. உறைந்த மாட்டிறை 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இத்தகைய அதிகரிப்பு குடும்பங்களை நெருக்கடி நிலைக்குத் தள்ளுவதுடன் உணவில் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலையை ஏற்படுத்துகின்றது.

பிரான்ஸில் வாழும் பணக்கார குடும்பங்கள் கூட சுப்பர் மார்க்கெட்களில் கொள்வனவு செய்யும் அளவினை கடுமையாக குறைத்துள்ளதாக புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் நாட்டின் பல இடங்களிலும் இறைச்சி விற்பனை அளவு 8.3 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் இந்தச் சரிவு செல்வந்தர்கள் மத்தியில் கிட்டத்தட்ட 11 சதவீதமாக மாறியிருப்பது ஆச்சரியமளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் 15 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக இறைச்சியை தவிர்த்துள்ளனர் என இன்சியின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.

மீன் கொள்வனவிலும் இதே வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் மீன் விற்பனையாளர்கள் கடுமையான வீழ்ச்சி ஒன்றை உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அன்றாட உணவு பொருட்கள் கொள்வனவில் பாரிய குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவ்வாறு பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்தால் மக்கள் உணவு வேளைகளை தவிர்க்கும் நிலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor