இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ விரைவில் 5ஜி சேவைகளை வெளியிட இருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி ஜியோ 5ஜி சேவைகள் முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா என நான்கு நகரங்களில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்து இருக்கிறார்.
முதற்கட்டமாக நான்கு நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டதும், நாட்டின் மற்ற பகுதிகளிலும் ஜியோ 5ஜி சேவைகள் வெளியிடப்பட உள்ளன. இந்த பணிகள் டிசம்பர் 2023 வாக்கில் நிறைவு பெறும் என தெரிகிறது. ஜியோ 5ஜி சேவைகள் முதலில் 5ஜி எஸ்ஏ எனப்படும் ஸ்டாண்ட்-அலோன் நெட்வொர்க்குகளில் அறிமுகம் செய்யப்படும்.
முன்னதாக 2016 வாக்கில் 4ஜி சேவைகள் வெளியீட்டின் போது ரிலையன்ஸ் ஜியோ அனைவரும் அதிர்ச்சியடைய செய்தது. இதே பானியை 5ஜி வெளியீட்டின் போதும் ஜியோ மேற்கொள்ளும் என தெரிகிறது. கட்டண ரீதியில் ஜியோ 5ஜி சேவைகள் பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இது மட்டுமின்றி பல்வேறு இதர வழிகளிலும் ஜியோ தனது திட்டங்களின் மூலம் அதிர்ச்சி அளிக்கும் என தெரிகிறது. 4ஜி சேவைகளை வெளியிடும் போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி சிம் கார்டுகளை இலவசமாக வழங்கியதோடு, டேட்டா மற்றும் வாய்ஸ் கால் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்தது.
இதே போன்ற திட்டத்தை 5ஜி வெளியீட்டிலும் ரிலையன்ஸ் ஜியோ மேற்கொள்ளலாம் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இது பற்றி ரிலையன்ஸ் ஜியோ சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. வர்த்தக பயனர்கள் மட்டுமின்றி தொழில்துறை பயனர்களுக்கும் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்பட உள்ளன. டெலிகாம் சந்தையில் 5ஜி வெளியீட்டில் ஜியோவுக்கு போட்டியளிக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்களும் 5ஜி சேவையை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.