மஹிந்த ராஜபக்சவின் கவச வாகனம் திருப்பிக் கொடுக்கப்பட்டது: பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட கவச வாகனம் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளதாக, அவரது ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே அறிவித்துள்ளார்.
ஜனாதிபதிகளின் சலுகைகளை (நீக்குதல்) சட்டத்தின் கீழ், ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் அனைத்தையும் திருப்பிக் கொடுக்குமாறு செப்டம்பர் 24 அன்று ஜனாதிபதி செயலாளர் பணிப்புரை விடுத்ததையடுத்து, வெள்ளிக்கிழமை (3) வாகனம் ஒப்படைக்கப்பட்டதாக கமகே தெரிவித்தார்.
ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனமும் திருப்பிக் கொடுக்கப்பட்டதாகக் கூறிய அவர், இந்த நடவடிக்கை முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்று எச்சரித்தார்.
ராஜபக்சவின் பாதுகாப்பிற்குத் தேவையான வாகனங்களைக் கோருவதற்காக, அடுத்த வாரம் பொலிஸ்மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர்களுடன் கலந்துரையாடல்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மனோஜ் கமகே மேலும் தெரிவித்தார்.

