யாழ் பல்கலைக்கழகத்தின் மீது மீனவர்கள் சங்கம் குற்றச்சாட்டு ! 

யாழ் பல்கலைக்கழகத்தின் மீது மீனவர்கள் சங்கம் குற்றச்சாட்டு !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கடற்றொழில் பீடம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையச் செயற்பட்டு, சீனக் கடல் அட்டைப் பண்ணைகளுக்கு ஆதரவளிப்பதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு தமிழ் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

யாழ்ப்பாணத்தில் நேற்று (அக்டோபர் 05) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “கடல் அட்டைப் பண்ணைகள் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து ஆராய்ச்சி செய்யுமாறு கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல்கலைக்கழகத்திடம் கோரிக்கை விடுத்தும், அதற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை,” என்று குறிப்பிட்டார்.

 

சிறு மீனவர்கள் புறக்கணிப்பு?

 

மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து பல்கலைக்கழகத்தின் கடற்றொழில் பீடம் கவலை கொள்வதில்லை என்று சுட்டிக்காட்டிய அன்னராசா, “கடல் வளங்கள் அழிகின்றன என்று மீனவர்கள் சுட்டிக்காட்டும் போது மௌனம் காத்த பல்கலைக்கழகம், கடந்த மாதம் திடீரென கடல் அட்டையைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் கடற்றொழில் திணைக்களங்களுடன் சேர்ந்து ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளது.”

 

“ஆனால், இந்தக் கூட்டத்திற்கு பாதிக்கப்பட்ட சிறு மீனவர்கள் அழைக்கப்படவில்லை. இது யாருக்கான கலந்துரையாடல்?” என அவர் கேள்வி எழுப்பினார்.

 

கதிரைக்காக விஞ்ஞான ஆய்வு?

 

மேலும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய பல்கலைக்கழகம் செயல்படுகிறதா என்று கேள்வி எழுப்பிய அவர், “தமிழ் மக்களின் கைகளில் உள்ள கடற்பரப்பையும் கடற்றொழிலாளர்களையும் அழிக்கின்ற அரசாங்கங்களின் கீழ் பல்கலைக்கழகத்தின் கடற்றொழில் பீடமும் செயல்படுகின்றதா? பதவியில் இருப்பவர்கள் தமது கதிரைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் என்று கூறிக்கொண்டு, கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்றனர்,” எனக் கடுமையாக விமர்சித்தார்.

 

எவ்வாறாயினும், வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கடற்றொழில் பீடத்தின் நிலைப்பாடு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Recommended For You

About the Author: admin