விஜேராம இல்லத்தை ஒப்படைக்க முடியாது..! மஹிந்த தரப்பு வெளியிட்ட அதிரடி.

விஜேராம இல்லத்தை ஒப்படைக்க முடியாது..! மஹிந்த தரப்பு வெளியிட்ட அதிரடி.

விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் அரசுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் உபகரணங்கள் உள்ள நிலையில் அவற்றை மதிப்பீடு செய்து அடையாளப்படுத்தாமல் வீட்டை ஒப்படைக்க முடியாது.

மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ளாமல் வீட்டை ஒப்படைத்தால் ‘மஹிந்த ராஜபக்ஷ அரச சொத்துக்களை லொறியில் ஏற்றிச் சென்றுவிட்டார்’ என்று குற்றஞ்சாட்டுவார்கள்.

அரச அதிகாரிகள் மதிப்பீடு பணிகளை மேற்கொள்ளாத காரணத்தால் தான் இல்லத்தை ஒப்படைக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்தார்.

விஜேராம அரச உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை இதுவரையில் அரசுக்கு ஒப்படைக்கவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் குறிப்பிடும் பொய்களில் இதுவும் ஒன்றாகவே காணப்படுகிறது. விஜேராம இல்லத்தை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி செயலகம் 2025.09.24 ஆம் திகதியன்று தான் உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

நிச்சயிக்கப்பட்ட காலம் ஏதும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை. இந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் அரசுக்கு சொந்தமான சொத்துக்களும்,ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவகத்துக்கு சொந்தமான சொத்துக்களும் உள்ளன.

இந்த சொத்துக்களை மதிப்பீடு செய்து அடையாளப்படுத்துமாறு குறித்த அரச அதிகாரிகளுக்கு நாங்கள் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தோம்.

அதிகாரிகள் இங்கு வருகைத் தந்து குறித்த மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதை தாமதப்படுத்தியதால் தான் இந்த வீட்டை ஒப்படைக்கவில்லை.

இல்லையென்றால் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ ‘மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு சொந்தமான சொத்துக்களை லொறியில் ஏற்றிச் சென்று விட்டார்’ என்றும் குறிப்பிடுவார்.

இவ்வாறான பின்னணியில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் அதிகாரிகள் இந்த வீட்டை இன்று (நேற்று) காணொளியாக பதிவு செய்துள்ளார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது சேறு பூசுவதற்கு ஏதாவதொரு விடயத்தை தேடிக்கொண்டு ஊடக கண்காட்சி நடத்துகிறார்கள் என்றார்.

Recommended For You

About the Author: admin