ஜப்பான் எக்ஸ்போ 2025: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பங்கேற்பு
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள், நேற்று காலை (செப்டம்பர் 27) ஜப்பானின் ஒசாகாவில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இவரது விஜயத்தின் முதல் நிகழ்வாக, ஒசாகாவில் நடைபெற்று வரும் “எக்ஸ்போ 2025” கண்காட்சியில் இடம்பெற்ற “இலங்கை தின” கொண்டாட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் மற்றும் ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தக் கொண்டாட்டத்தில், இலங்கையின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் பல்வேறு கலை மற்றும் கலாசார நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டன.
‘எக்ஸ்போ 2025 ஒசாகா’வின் போது, ஜனாதிபதி இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கண்காட்சிக் கூடங்களுக்கும் விஜயம் செய்தார்.
நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி திஸாநாயக்க, எக்ஸ்போ 2025 ஆனது, இலங்கையின் கலாசாரம், புதுமை மற்றும் மனித விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான பார்வையைப் பகிர்ந்துகொள்ள ஒரு உலகளாவிய தளத்தை வழங்குகிறது என வலியுறுத்தினார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜயித்த ஹேரத், இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகியோ இசோமட்டா, ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க மற்றும் ஜப்பானிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


