பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கம்: உலகத் தரத்திற்கு இணங்க புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை திட்டம்!
பயங்கரவாதத்திற்கு எதிரான கட்டமைப்பைச் சீர்திருத்துவதற்கும், நல்லிணக்கப் பொறிமுறைகளை வலுப்படுத்துவதற்கும் இலங்கை உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தில் நடைபெற்ற காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான குழுவின் 29ஆவது அமர்வில் அரசாங்கத்தின் சட்டமியற்றும் நிகழ்ச்சி நிரல் குறித்துப் பேசிய அமைச்சர் நாணயக்கார, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான நிர்வாகம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இரத்துச் செய்யவும், அதற்குப் பதிலாக சர்வதேசத் தரங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க ஒரு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மாற்றீடு செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்தார்.
”அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட ஒரு குழு தற்போது வரைவுச் சட்டத்தை இறுதி செய்யும் மேம்பட்ட கட்டத்தில் உள்ளது,” என்று அவர் கூறினார். மேலும், இந்த புதிய சட்டத்தை அரசாங்கம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான இணை நகர்வாக, நீண்டகாலக் வழக்குகளை விரைவுபடுத்துவதற்காக காணாமற்போனோர் அலுவலகத்திற்கு (OMP) மேலதிகமாக 375 மில்லியன் ரூபாயை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
காணாமற்போன 23 நபர்களை OMP ஏற்கனவே கண்டறிந்துள்ளது, அவர்கள் காணாமல் போனதற்கான சான்றிதழ்களை வழங்கியுள்ளது, அத்துடன் இழப்பீட்டுக்கான அலுவலகத்திற்கும் (Office for Reparations) பரிந்துரைகளை வழங்கியுள்ளது என்று அமைச்சர் வெளிப்படுத்தினார்.
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான குழுவின் (CED) 29ஆவது அமர்வின் 548ஆவது கூட்டத்தில், இலங்கை தொடர்பிலான விடயம் கவனத்தில் கொள்ளப்பட்டது. இந்த அமர்வில் நீதி அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார இலங்கைத் தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கினார்.

