18000 சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு..!
கே எ ஹமீட்
பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சுசார் ஆலோசகைனக் கூட்டம் அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னலகே அவர்களின் தலைமையில் இன்று (24.09.2025) பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கருத்து தெரிவிக்கையில் நமது நாட்டில் 18000 சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோத்தர்கள் 30 வருட காலமாக நமது நாட்டின் வறுமையை ஒழிப்பதில் முன்னின்று செயற்பட்டு வருகின்றனர். நமது நாட்டில் ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டும் இதுவரை இவர்களுக்கான பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். எனவே, நமது நாட்டில் வறுமையை ஒழிப்பதற்கு முன்னின்று செயற்படும் இவ் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பதவி உயர்வு வழங்குவதற்கான ஏற்பாடுகளை அமைச்சு விரைவில் மேற்கொள்ள வேண்டும் எனவும், நமது நாட்டில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நீண்டகாலமாக நிலவி வருகின்றது. எனவே, இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஏற்பாடுகளை அமைச்சு மேற்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி அதிகார சபையினால் தமிழ் மொழிப் பிரதேசங்களுக்கு அனுப்பப்படுகின்ற கடிதங்கள் சிங்கள மொழியினால் மாத்திரம் அனுப்பப்படுகின்றமையினால் தமிழ் மொழிப் பிரதேச அதிகாரிகள், பொது மக்கள் பாரிய கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே, எமது நாட்டில் தமிழ் மொழியும் ஒரு தேசிய மொழியாக இருப்பதனால் இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி அதிகார சபையினால் தமிழ் மொழிப் பிரதேசங்களுக்கு அனுப்படுகின்ற கடிதங்களை தமிழ் மொழியில் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என அம்பாறை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையின் கோரிக்கையை அடுத்து அமைச்சர் அமைச்சின் அதிகாரிகளிடம் இது தொடர்பான விளக்கங்களைப் பெற்று 18 ஆயிரம் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு வழங்கும் செயற்பாடுகள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அமைச்சின் அதிகாரிகள் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறு பணிப்புரை வழங்கியதுடன், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதியினை கோரியுள்ளதாகவும், அனுமதி கிடைத்ததும் அவர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் பதிலளித்தார்.
சமூர்த்தி அதிகார சபையினால் தமிழ் மொழிப் பிரதேசங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்கள் சிங்கள மொழியினால் மாத்திரம் ஏன் அனுப்பப்படுகிறது? என அமைச்சர் அமைச்சின் அதிகாரிகளிடம் விளக்கமளிக்குமாறு கேட்டார். இது தொடர்பாக பதிலளித்த சமூர்த்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர், சமூர்த்தி அதிகார சபையில் தமிழ் மொழிக்கான மொழி பெயர்ப்பாளர் இல்லை எனவும், அதனால் தான் சிங்கள மொழியில் கடிதங்கள் அனுப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னலகே, நமது நாட்டில் தமிழ் மொழியும் ஒரு தேசிய மொழியாக இருப்பதனால் தமிழ் மொழி பெயர்ப்பாளர் இல்லையென்றால் சமூர்த்தி அதிகார சபையினால் ஒப்பந்த அடிப்படையிலாவது மொழி பெயர்ப்பாளர்களை நியமித்து இனிமேல் சமூர்த்தி அபிவிருத்தி அதிகார சபையினால் தமிழ் மொழிப் பிரதேசங்களுக்கு தமிழ் மொழியில் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என பணிப்புரை வழங்கினார்.
தனது மூன்று கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் பணிப்புரை வழங்கியமைக்கு அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தனது நன்றியினை அமைச்சருக்கு தெரிவித்தார்.

