பிரித்தானியாவிலிருந்து தப்பியோடிய இலங்கை தம்பதியினர்: £1.5 பில்லியன் கடன் மோசடி!

பிரித்தானியாவிலிருந்து தப்பியோடிய இலங்கை தம்பதியினர்: £1.5 பில்லியன் கடன் மோசடி!

​லண்டனைத் தளமாகக் கொண்ட எரிசக்தி நிறுவனமான பிராக்ஸ் குரூப் (Prax Group), £1.5 பில்லியனுக்கும் அதிகமான கடன்களால் திவாலானதைத் தொடர்ந்து, இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அதன் அதிபரும் அவரது மனைவியும் பிரித்தானியாவிலிருந்து தப்பியோடியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

​சஞ்சீவ் குமார் என்று அழைக்கப்படும் வின்ஸ்டன் சஞ்சீவ் குமார் சூசைப்பிள்ளை மற்றும் அவரது மனைவி ஆரணி ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக நம்பப்படுகிறது. இதனால், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை இழப்பு அபாயத்தையும், பல மில்லியன் பவுண்டுகள் கடன் வழங்கியோர் பணத்தைப் பெற முடியாமலும் தவிக்கின்றனர்.

 

​லிங்கன்ஷையரில் உள்ள லிண்ட்ஸே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்குச் சொந்தமான இந்த நிறுவனம், கடந்த ஜூன் மாதம் நிர்வாகத்தின் கீழ் வந்தது. சுத்திகரிப்பு நிலையத்தின் திடீர் மூடலால் சுமார் 420 வேலைகள் ஆபத்தில் உள்ளன. நிர்வாகிகளான டெனியோ (Teneo) நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிறுவனம் ஊழியர்களுக்கு £4 மில்லியனுக்கும் அதிகமாகவும், HMRC-க்கு £70 மில்லியனும், ஷெல்லுக்கு £9.2 மில்லியனும், செலுத்தப்படாத வரிகளில் £250 மில்லியனும் உட்பட பல பில்லியன் பவுண்டுகள் கடன்பட்டுள்ளது. உபேர் (Uber) மற்றும் ரென்டோகில் (Rentokil) போன்ற நிறுவனங்களும் கடன் வழங்கியவர்களில் அடங்குவர்.

 

​நிறுவனம் கிட்டத்தட்ட £30 மில்லியன் இழப்பைச் சந்தித்த போதிலும், கூட்டாக நிறுவனத்தை வைத்திருந்த இத்தம்பதியினர் கடந்த ஆண்டு £3.65 மில்லியன் எடுப்பனவுத்தொகையாக (dividend) தங்களுக்குச் செலுத்திக்கொண்டது அம்பலமானது. இதனால், அவர்கள் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளனர். இவர்களை நிர்வாகத் தவறுக்காகக் குற்றம் சாட்டியுள்ள அரசாங்க அமைச்சர்கள், “இந்தச் சவாலான காலகட்டத்தில் ஊழியர்களுக்கு ஆதரவளித்து, சரியானதைச் செய்யுமாறு” சஞ்சீவ் குமாரை வலியுறுத்தியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin