மாக்கந்துர மதுஷின் மரணம்: மனைவி காவற்துறை தலைமையகத்தில் முறைப்பாடு – நீதி கோரி ஐந்து வருடங்களின் பின்னர் முன்வந்தார்

மாக்கந்துர மதுஷின் மரணம்: மனைவி காவற்துறை தலைமையகத்தில் முறைப்பாடு – நீதி கோரி ஐந்து வருடங்களின் பின்னர் முன்வந்தார்

​பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துர மதுஷின் மனைவி, 2020 ஒக்டோபரில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரின் காவலில் இருந்தபோது இறந்த தனது கணவரின் மரணம் குறித்து, முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை கோரி காவற்துறை தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

​தனது முறைப்பாட்டைச் சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மதுஷின் சட்டபூர்வ மனைவி கயனி முத்துமாலி, அவரது மரணம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து ஆழ்ந்த சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.

​”அவர் ஒன்றரை வருடங்கள் காவற்துறையின் காவலில் இருந்தார். ஒரு நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டிருந்தால் அது நீதியாக இருந்திருக்கும். ஆனால், வீதியில் ஒரு மிருகத்தைப் போல் கொல்லப்படுவது மிகவும் தவறானது. இன்னொரு பாதாள உலகக் குழுவுக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் சம்பவ இடத்தில் இருந்தும், சந்தேக நபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் எமக்கு வழங்கப்படவில்லை. ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. நாங்கள் நீதியை மாத்திரமே கோருகிறோம்,” என்று அவர் கூறினார்.

​இவ்வளவு காலம் மௌனமாக இருந்தது ஏன் என கேட்டதற்கு, “அப்போது என்னால் பகிரங்கமாக பேச முடியவில்லை. ஆனால், தற்போதைய அரசாங்கம் சட்டத்தை நிலைநிறுத்தி நீதியை வழங்கும் என்ற நம்பிக்கை எனக்கு இன்று உள்ளது. அதனால்தான் நான் முன்வந்தேன்,” என முத்துமாலி பதிலளித்தார்.

​குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் சட்டத்தரணி செனக பெரேரா கூறுகையில், மதுஷ் குற்றப்புலனாய்வு திணைக்களத்துடன் ஒரு வருடத்திற்கும் மேலாக ஒத்துழைத்து, அரசியல் பிரமுகர்கள், காவற்துறை அதிகாரிகள் மற்றும் பிற செல்வாக்கு மிக்க நபர்கள் பற்றிய இரகசிய தகவல்களை வெளியிட்டார் என தெரிவித்தார்.

​அந்த தகவல்கள் வெளியாவதை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், மதுஷின் மரணம் ஒரு மூடிமறைப்பிற்கு வழிவகுத்திருக்கலாம் என தான் சந்தேகிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

​மதுஷ், 2019 பெப்ரவரி 5 ஆம் திகதி டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கிற்கு நாடு கடத்தப்பட்டார்.

​2019 மே 5 ஆம் திகதி அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் காவலில் எடுக்கப்பட்டு, பின்னர் 2020 ஒக்டோபர் 16 ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

​நான்கு நாட்களுக்குப் பின்னர், ஒக்டோபர் 20 ஆம் திகதி, போதைப்பொருள் பதுக்கலை அடையாளம் காட்டுவதற்காக அவர் மாளிகாவத்தையில் ஒரு காவற்துறை நடவடிக்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

​சமீபத்தில், பிரதி தொழிலாளர் அமைச்சர் மகிந்த ஜயசிங்க, செப்டம்பர் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் 80 இற்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளை சம்பந்தப்படுத்தி மதுஷிடம் இரகசியங்கள் இருந்ததாக கூறினார்.

Recommended For You

About the Author: admin