35 வயதிற்கு மேற்பட்ட வர்கள் ஆண்டுக்கு 02 தடவைகள் மருத்துவப் பரிசோதனை செய்வது அவசியம்..!

35 வயதிற்கு மேற்பட்ட வர்கள் ஆண்டுக்கு 02 தடவைகள் மருத்துவப் பரிசோதனை செய்வது அவசியம்..!

தொற்றா நோயினைக் கட்டுப்படுத்தும் மாவட்ட செயலணி ஸ்தாபித்தல் தொடர்பான கூட்டத்தில் டாக்டர் கேதீஸ்வரன் கோரிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொற்றாய் நோய்யினைக் கட்டுப்படுத்தல் தொடர்பான மாவட்டச் செயலணி ஸ்தாபித்தல் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (04.09.2025) பிற்பகல் 03.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 

இக் கூட்டத்தில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் வி. பி. எஸ். டி. பத்திரன மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ. கேதீஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.

 

மேலும் இக் கூட்டத்தில்

தொற்றாய் நோய்களான நீரழிவு, உயர்குருதி அழுத்தம், கொலஸ்ரோல், புற்றுநோய் போன்றவற்றால் இலங்கையில் 83% இறப்பு ஏற்படுவதாக

டாக்டர் கே. இலங்கோகனிகர் அவர்களினால் விபரமாக எடுத்துக் கூறப்பட்டதுடன், ஆரோக்கியமான சுகாதார முறையிலான உணவின் அவசியம், உடற்பயிற்சி, பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு, பாடசாலைகளில் ஆரோக்கிய சிற்றுண்டிச் சாலையின் அவசியம், விபத்துக்களைத் தடுத்தல், போன்றவை தொடர்பாக விபரிக்கப்பட்டது.

 

இக் கூட்டத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ. கேதீஸ்வரன் அவர்களால் பின்வரும் விடயங்கள் தெரிவிக்கப்பட்டது.

 

1.பாடசாலை களிலும், அலுவலகங்களிலும் ஆரோக்கியமானமேம்பாட்டு அறை (Healthy Promostion Room) இருத்தல் வேண்டும்.

 

2.வயது 35 இனைக் கடந்தவர்கள் ஆண்டுக்கு இரண்டு தடவைகள் மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம். பொதுமக்கள் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அல்லது சுகாதார நிலையங்களில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு தமக்குரிய தனிப்பட்ட மருந்துவப் புத்தகத்தினை பேண முடியும்.

 

3.அலுவலகங்கள், நிறுவனங்கள் கேட்க்கும் பட்சத்தில் இலவச மருத்துவ பரிசோதனைகள் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மேற்கொள்ளப்படும்.

 

4.அலுவலகங்களில் புகைத்தல் தடைசெய்யப்பட்ட பிரதேசம் என காட்சிப்படுத்தப்பட்ட பலகை இருத்தல் வேண்டும் என்பதுடன் அலுவலகங்களுக்கு வருபவர்கள் வெற்றிலையுடன் (வெற்றிலையினை சாப்பிட்டுகொண்டு) வருவதனையும் அனுமதிக்கக் கூடாது.

 

5.வீதி விபத்துக்களை தடுத்தல் வேண்டும் என்பதுடன், பாதுகாப்பற்ற கிணறுகளால் ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கி இறப்பது அதிகரித்துள்ளதால் அது தொடர்பில் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் எனவும் – ஆபத்தானது என்று அடையாளப்படுத்தல்கள் அல்லது தடுப்புக்கள் அவசியமானது.

 

6.கடந்த ஆண்டில் விசர்நாய் கடியினால் ஒருவருக்கு இறப்பு ஏற்பட்டது என்றும் பொதுமக்களுக்கு இது தொடர்பிலான விழிப்புணர்வு அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் வி. பி. எஸ். டி. பத்திரன அவர்கள், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் காட்டும் அக்கறையினை பிள்ளைகளின் சுகாதாரத்திலும் செலுத்த வேண்டும் எனவும், பிள்ளைகளின் உடல், உள ஆரோக்கியம் அவசியம் எனவும் தெரிவித்தார்.

 

மாவட்டச் செயலணியின் தலைவர்களாக அரசாங்க அதிபரும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் செயற்படுவார்கள்.

 

இக் கூட்டத்தில் செயலணியின் உறுப்பினர்களான திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், விளையாட்டுத் துறை உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

Recommended For You

About the Author: admin