வடக்கு மாகாணத்தில் உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்க உள்ளூராட்சி மன்றங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை கல்வி அபிவிருத்திக் குழுமத்தின் காப்பாளர் நடராசா சச்சிதானந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;
வடக்கு மாகாணத்தில் இலட்சக்கணக்கான பனை மரங்கள் உள்ளன.அதன் ஒவ்வொரு பாகமும் ஏதோவொரு உற்பத்திக்கு உகந்தது.ஆனால் அவை பயன்பாடு இன்றி வீணாகிப் போகின்றன.
பனை வளத்தை முழுமையாக பயன்படுத்தி அதிலிருந்து வருமானத்தைப் பெறுவதற்கான நடவடிக்கையை பனை அபிவிருத்திச் சபை மற்றும் வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் முன்னெடுக்க வேண்டும்.
பல நாடுகள் தென்னை மற்றும் பனை வளத்தைப் பயன்படுத்தி தும்பு உற்பத்தி உள்ளிட்ட பல உற்பத்திகளைச் செய்கின்றன.எம்மிடம் அந்த வளங்கள் இருந்தும் நாம் பிளாஸ்டிக்கால் ஆன இடியப்பத் தட்டு,தும்புத்தடி, விளக்குமாறுகளைப் பாவிக்கின்றோம். இதன் பாதிப்புக்களை உணராதவர்களாக நாம் இருப்பது வருத்தமளிக்கின்றது.
முன்னைய காலத்தில் இவ்வாறான பனை சார் மற்றும் தென்னை சார் உற்பத்திப் பொருட்கள் ஊடாகவே வடக்கு மாகாண மக்கள் வருமானம் ஈட்டினார்கள் .ஆனால் இன்று அவை அனைத்தையுமே எம் மக்கள் கைவிட்டு விட்டனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து விவசாய உற்பத்திகளை வளர்முக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலைமை ஏற்பட வேண்டும்.யாழ்ப்பாண விமான நிலையத்தை மெருகூட்டும் பட்சத்தில் அது சாத்தியமாகும்.அதே நேரம் விவசாயிகளும் அதிகளவில் உற்பத்திகளில் ஈடுபட்டு வருமானத்தை ஈட்ட முயற்சிக்க வேண்டும்.
இந்தியாவில் வாழை நாரில் சேலை தயாரிக்கின்றனர்.ஆனால் எமது நாட்டில் அவ்வாறான மூலப்பொருட்கள் வீணாக்கப்படுகின்றது. எம்மால் அந்த உற்பத்தியை செய்ய முடியாவிட்டாலும்,மூலப் பொருளை ஏற்றுமதி செய்வதற்காவது முயற்சி எடுக்க வேண்டும்.
அதேநேரம் இலங்கையில் பொலித்தீன் பாவனை வெகுவாக அதிகரித்துக் காணப்படுகின்றது.
அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.முடிந்தவரை பொலித்தீன் பாவனையைக் குறைத்து பாதிப்பு இல்லாத உள்ளூர் உற்பத்திகளைப் பயன்படுத்த வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் மக்களின் வாழ்வியலோடு தொடர்பு பட்ட பிரச்சனைகள் காணப்படுகின்றன.
அவை தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வுகளை நடத்த வேண்டும். ஆய்வுகளுக்கான நிதியினை புலம்பெயர் மக்கள் ஊடாக பெற முயற்சிக்கலாம்.
அரசியல்வாதிகளால் முன்வைக்கப்படுகின்ற தீர்வை அனைவரும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்-பல்கலைக்கழகங்கள் ஊடான ஆய்வு முடிவுகளையும்-அதற்கான தீர்வுகளையும் எவரும் எதிர்க்க மாட்டார்கள் .என மேலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

