கல்வி சீர்திருத்தங்களுக்கான செலவை துல்லியமாகக் கூற முடியாது: கல்வி அமைச்சு
ஆசிரியர் பயிற்சி, பாடத்திட்ட சீர்திருத்தங்களுக்கான பணம் 2026 வரவுசெலவுத் திட்டத்திலிருந்து பெறப்படும்
முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களுக்கான செலவு குறித்து எந்தக் கணக்கீடும் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு மத்தியில், மொத்தச் செலவுக்கான துல்லியமான புள்ளிவிவரத்தை முன்வைக்க முடியாது என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கிடையே பேசிய அமைச்சின் செயலாளர் நாளக கலூவெவ, கல்விச் சீர்திருத்தங்கள் பல செயல்முறைகளை உள்ளடக்கியது என்றும், தேவையான பணம் அடுத்த ஆண்டு (2026) வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து பெறப்படும் என்றும் விளக்கினார்.
“ஒவ்வொரு ஆண்டும் கல்விக்காக ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியை சீர்திருத்த திட்டத்திற்கு ஏற்ப நாம் நிர்வகிக்க வேண்டும். உதாரணமாக, சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக பாடப்புத்தகங்கள் மாற்றப்படும்போது, அச்சிடுவதற்குப் பொதுவாக ஒதுக்கப்படும் நிதி அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும்.
இந்த ஆண்டு மட்டும் பாடப்புத்தகங்களுக்காக 15 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
ஆசிரியர் பயிற்சி, பாடத்திட்ட சீர்திருத்தங்கள் மற்றும் பிற முன்னுரிமைத் திட்டங்கள் போன்ற துறைகளில் நிதி பயனுள்ள வகையில் செலுத்தப்பட்டு, ஒரு முறையான திட்டத்தின்படி கல்விச் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களுக்கான நிதி, உழைப்பு அல்லது மாணவர் தாக்கம் தொடர்பான எந்தவொரு மதிப்பீடும் வெளியிடப்படவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) அண்மையில் கூறியது.
CTU தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, 2021 இல் தொடங்கப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களுக்காக கிட்டத்தட்ட 500 மில்லியன் ரூபாய் ஏற்கனவே செலவிடப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிர்வாகம் அவற்றை தொடருமா அல்லது கைவிடுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
உலக வங்கியிலிருந்து உறுதியளிக்கப்பட்ட நிதி உதவியைப் பெறுவதற்காக போதுமான திட்டமிடல் இல்லாமல் சீர்திருத்தங்கள் விரைவுபடுத்தப்படுகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் வழங்கப்படும் பாடங்களின் எண்ணிக்கையை ஏழு ஆகக் குறைத்தல், ஐந்து கட்டாயப் பாடங்களான கணிதம், ஆங்கிலம், தாய்மொழி (சிங்களம்/தமிழ்), சமயம் மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றுடன் தொழில்நுட்பம், அழகியல், முகாமைத்துவம் மற்றும் தொழில்முனைவு, மானிடவியல் மற்றும் சமூக அறிவியல், அல்லது சுகாதாரம் மற்றும் உடற்கல்வி ஆகிய இரண்டு தெரிவுப் பாடங்கள் போன்ற ஆரம்ப சீர்திருத்த நடவடிக்கைகளை அமைச்சு ஏற்கனவே அறிவித்துள்ளது. அத்துடன், ஒரு நாளைக்கு ஏழு கற்பித்தல் காலங்கள், ஒவ்வொன்றும் 50 நிமிடங்கள் ஆக குறைக்கப்படவுள்ளது

