சட்டமானது அனைத்து குடிமக்களுக்கும் சமமாக அமுல்படுத்தப்படும் என்றும், ஊழல் குற்றவாளிகள் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று மீண்டும் வலியுறுத்தினார்.
“சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்கும் என்று நாம் கூறும்போது அவர்கள் ஏன் இவ்வளவு கடுமையாக எதிர்வினையாற்றுகிறார்கள்? ஏனெனில் அவர்கள் குற்றவாளிகள் என்று அவர்களின் மனசாட்சி அவர்களுக்குச் சொல்கிறது,” என குறிப்பிட்ட ஜனாதிபதி, தனது அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு தனிநபரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என்றார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டதும் செப்டம்பர் மாதம் முதல், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து அரச வீடுகளும் அரசாங்கத்தால் மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்தார்.
இந்த நடவடிக்கை பொறுப்புக்கூறலை வலுப்படுத்துவதற்கும் நீதியை உறுதி செய்வதற்கும் மேற்கொள்ளப்படும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதி என்றும், தனது நிர்வாகத்தின் கீழ் எந்தவொரு தனிநபரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

