ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும்..!

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும்..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் கொழும்பில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

 

மேலும் தெரிவிக்கையில்,

 

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையிலேயே தற்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று கூடியுள்ளோம்.

 

எமது அரசியல் கொள்கையில் நாம் கவலையடைந்திருக்கிறோம், சிறைவாசம் அனுபவித்திருக்கிறோம். பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தும் வருகின்றோம்.

 

அரசியல்வாதிகள் சிறைவாசம் அனுபவிக்கவில்லையாயின் அவர்களின் அரசியல் வாழ்க்கை பூரணமடையாது.

 

எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

 

எனவே அவரை விடுப்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும், சட்டத்தரணிகளும் ஒன்றிணைந்து ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளை முனைப்புடன் முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, ரணில் கைது செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் ஆகும். இதனை கூட்டு எதிர்க்கட்சியாக வன்மையாக கண்டிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்

 

பட்டலந்த வதை முகாம், இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே, அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்தது.

 

எனவே அவ்வாறான குற்றச்சாட்டுக்களில் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்திருந்தால் எதிர்க்கட்சிகள் இவ்வாறு ஒன்றிணைந்து இந்த ஊடக சந்திப்பை நடத்தியிருக்க தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடும் கவலை தெரிவித்துள்ளார்.

 

இது இலங்கையின் ஜனநாயகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாக எச்சரித்துள்ளார்.

 

ஒரு அறிக்கையில், குமாரதுங்க இந்த நடவடிக்கை நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதலுக்குச் சமம் என்றும், அதன் தாக்கங்கள் ஒரு தனிநபர் அல்லது அரசியல் கட்சியைத் தாண்டி நீண்டுள்ளது என்றும் வலியுறுத்தினார்.

 

இந்த வளர்ச்சி ஒட்டுமொத்த சமூகத்தின் உரிமைகளுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும், அனைத்து அரசியல் தலைவர்களும் இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகள் என்று தான் விவரித்தவற்றுக்கு தனது நிபந்தனையற்ற எதிர்ப்பை வெளிப்படுத்துவதில் குமாரதுங்கவும் இணைகிறார், மேலும் அவை கூட்டாக எதிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

 

விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

 

எதிர்கட்சிகள் சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் ஸ்ரீபால டி சில்வா, ஜீ.எல் பீரிஸ் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் பங்கேற்ற போதிலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin