கட்டுநாயக்க விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்: சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் விளக்கம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) முனையம் 02 ஐ விரிவாக்காதது உட்பட பல பிரச்சினைகள் காரணமாகவே, உச்ச நேரங்களில் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தனது ‘X’ தளத்தில் அவர் இட்ட பதிவில், பல காரணங்களால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறினார். பயணிகளுடன் வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இந்த நெரிசலுக்கு ஒரு காரணம் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், உள்கட்டமைப்பு பிரச்சினைகளையும் குறிப்பிட்டார்.
“முனையம் 2 ஐ விரிவாக்காதது, குறைவான சோதனை கவுண்டர்கள், குடிவரவு அதிகாரிகளின் பற்றாக்குறை, தாமதமான டிஜிட்டல்மயமாக்கல் (Egates இல்லை) போன்ற காரணங்களால் நெரிசல் ஏற்படுகிறது” என்று அவர் கூறினார்.
இந்த பிரச்சினைகளுக்கு சில மாதங்களுக்குள் அரசாங்கம் தீர்வு காணும் என்றும், நீண்டகால தீர்வாக தாமதமாகி வரும் முனையம் 02 விரிவாக்கமே அமையும் என்றும் அமைச்சர் ரத்நாயக்க உறுதியளித்தார்.
வியாழன் முதல் சனிக்கிழமை வரை இரவு 10.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படுதல் பகுதிக்குள் பார்வையாளர்கள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனம் அறிவித்ததை தொடர்ந்து, அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
பயணிகளின் நெரிசலைக் குறைத்து, விமான நிலைய நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக இந்த நடவடிக்கை உடனடியாக அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

