முன்னாள் எம்.பி. ரத்தன தேரர், துசித ஹல்லோலுவவுக்கு திறந்த பிடியாணை

முன்னாள் எம்.பி. ரத்தன தேரர், துசித ஹல்லோலுவவுக்கு திறந்த பிடியாணை: வெளிநாட்டுப் பயணத்தடை விதிப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ ஆகியோருக்கு எதிராக திறந்த பிடியாணை (Open Warrants) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

கொழும்பு குற்றப் பிரிவினர் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில், கங்கொடவில மற்றும் கோட்டை நீதிவான் நீதிமன்றங்களால் இந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், இவர்கள் இருவருக்கும் வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

அண்மையில், “அபே ஜனபல பக்க்ஷய” கட்சியின் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய வண. வேடனியகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக தான் கைது செய்யப்படலாம் என அத்துரலியே ரத்தன தேரர் கவலை தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒரு எதிர்பார்ப்பு பிணை விண்ணப்பம், கங்கொடவில நீதிவான் நீதிமன்றத்தில் அத்துரலியே ரத்தன தேரர் தாக்கல் செய்திருந்தபோதும் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை, துசித ஹல்லோலுவவுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டமைக்கான காரணம் குறித்து பொலிஸ் கூறுகையில், அவர் சட்டத்தரணி ஒருவருடன் பயணித்த வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியதாகவும், அப்போது அவரிடம் இருந்த பல ஆவணங்கள் கொள்ளையிடப்பட்டதாகவும் கூறப்படும் சம்பவம் தொடர்பானது என தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin