கொட்டாஞ்சேனையில் மாணவியின் தற்கொலை குறித்து தொடர் விசாரணை
கொழும்பின் கொட்டாஞ்சேனை பகுதியில் மேலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவியின் சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதிவான் பாசான் அமரசேன முன்னிலையில் நேற்று (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணைகளை மேற்கொண்டு வரும் கொழும்பு வடக்கு சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி, நீதிமன்றத்தில் இந்த தகவலை தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான CCTV காணொளிகளைப் பயன்படுத்தி மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக CCTV காணொளிகள் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த விசாரணைகளின் முன்னேற்றத்தை செப்டம்பர் 29-ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

