இந்தியா-இலங்கை-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முத்தரப்பு ஒப்பந்தம்: திருகோணமலை எரிசக்தி மையத் திட்டம் முடக்கம்?
திருகோணமலையை ஒரு மூலோபாய எரிசக்தி மையமாக மேம்படுத்துவதற்காக இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகியவற்றுக்கு இடையே ஒரு முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கையெழுத்திடப்பட்ட போதிலும், சுத்திகரிப்பு ஆலை, திருகோணமலை எரிபொருள் தாங்கிகளைப் புனரமைத்தல், எரிபொருள் தொடர்பான திட்டங்கள், கூட்டு முயற்சி நிறுவனம் அல்லது முன்மொழியப்பட்ட இருவழிப் பெற்றோலியக் குழாய் உட்பட எந்தவொரு முக்கிய முன்முயற்சியிலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபாலவின் கூற்றுப்படி, இந்தத் திட்டங்கள் குறித்து இதுவரை எந்த விவாதமும் நடத்தப்படவில்லை.
“புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே, அடுத்த கட்டமாக, அரசாங்க நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள் அல்லது இணைக்கப்பட்ட நிறுவனங்கள் என எதுவாக இருந்தாலும், ஒப்பந்தத்தின் வணிக ரீதியான கூறுகளைச் செயல்படுத்தக்கூடிய குறிப்பிட்ட முகவர் அமைப்புகளை அடையாளம் கண்டு நியமிப்பதாகும்.
அதன் பிறகுதான், இந்த மூன்று நாடுகளிலிருந்தும் நியமிக்கப்பட்ட நிறுவனங்களால் உண்மையான திட்டங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டு உருவாக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எரிபொருள் குழாய் ஒப்பந்தம் மற்றும் விரிவான திருகோணமலை எரிசக்தி மையம் குறித்து பகிரங்கமாகக் குறிப்பிட்ட போதிலும், இலங்கை அதிகாரிகள் அந்தத் திட்டத்தின் வளர்ச்சி குறித்து நிச்சயமற்ற நிலையில் உள்ளனர்.
புதிய நிர்வாகம் பதவியேற்றதிலிருந்து எரிபொருள் குழாய் குறித்து ஒரே ஒரு சந்திப்பை மட்டுமே இலங்கை அரசாங்கம் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நாட்டின் எரிசக்தித் துறையின் முக்கிய பிரமுகர்களை உள்ளடக்கிய எரிசக்தி குழுவுடன் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் நடந்த ஒரு செய்தியாளர் மாநாட்டில், பிரதமர் மோடி பல்திறன் கொண்ட எரிபொருள் குழாய் மற்றும் கட்டமைப்பு இணைப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட பிற எரிசக்தி முன்முயற்சிகளின் நன்மைகளை வலியுறுத்தினார்.
எனினும், பகிரங்க அறிக்கைகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இருந்தபோதிலும், பல்திறன் கொண்ட எரிபொருள் குழாய்க்கான நிதி சாத்தியக்கூறு ஆய்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை, இது திட்டத்தின் சாத்தியக்கூறு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.
இந்தியா, நாகப்பட்டினத்தில் இருந்து திருகோணமலை எரிபொருள் தாங்கிகள் மற்றும் கொழும்புடன் இணைக்க முன்மொழியப்பட்ட இந்த எரிபொருள் குழாய், குறைந்தபட்ச கொள்முதல் நிபந்தனையைக் கொண்டிருக்கும் என்றும், குறிப்பிட்ட அளவு பெற்றோலியத்தை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்ய இலங்கையைக் கட்டாயப்படுத்தும் என்றும், இது நாட்டுக்கு நிதிப் பொறுப்பை உருவாக்கும் என்றும் முந்தைய அறிக்கைகள் சுட்டிக்காட்டின.

