பாலின சமத்துவத்துக்கான மாற்று வழிகளை ஆராயும் இலங்கை அரசு
பாலின சமத்துவ மசோதா கடந்த ஆண்டு அரசியலமைப்புக்கு முரணானது என உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட பின்னர், பாலின சமத்துவம் மற்றும் LGBTQIA+ உரிமைகளை மேம்படுத்துவதற்காக மாற்று வழிகளை இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
நிராகரிக்கப்பட்ட மசோதாவில் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து, முற்றிலும் புதிய சட்டத்தை வரைவது குறித்து அதிகாரிகள் இப்போது பரிசீலித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன தெரிவித்துள்ளார்.
பௌத்த காங்கிரசு உட்படப் பழமைவாத குழுக்களிடமிருந்து பாலின சமத்துவ மசோதாவுக்கு உடனடி சட்ட சவால்கள் ஏற்பட்டன. 2024 ஜூலை மாதத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, அரசாங்கம் முன்மொழியப்பட்ட சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டியிருந்தது.
“இந்த மசோதாவில் பல குறைபாடுகள் இருப்பதால், அதனை மீண்டும் ஆராய்ந்து, திருத்தங்களை அறிமுகப்படுத்த முடியுமா என்பதை நாங்கள் இன்னும் ஆய்வு செய்து வருகிறோம்,” என்று பிரதி அமைச்சர் சுதர்ஷன ஒப்புக்கொண்டார்.
தேர்தல் முன்னுரிமைகள் மற்றும் பிற கொள்கை விடயங்கள் இந்த நடவடிக்கைகளை தாமதப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சட்டப்பூர்வ பரிசீலனைகளைத் தாங்கும் வகையில் இந்தச் சட்டம் அமைய வேண்டுமென்பதால், எந்தவொரு புதிய முயற்சியும் அமைச்சுக்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, குறிப்பாக நீதி அமைச்சுடன் அவசியமானது என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
சட்டங்களை எவ்வாறு அறிமுகப்படுத்துவது என்பது குறித்து அரசாங்க மட்டத்தில் விவாதங்கள் நடைபெற்று வருவதாக அவர் ஒப்புக்கொண்டாலும், LGBTQIA+ உரிமைகளைத் தீர்க்க ஒரு குழு இன்னும் அமைக்கப்படவில்லை என அவர் தெளிவுபடுத்தினார்.
எனினும், பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளில் பாகுபாட்டைத் தடுக்கும் வகையில் சீர்திருத்தங்கள் உட்பட படிப்படியான முன்னேற்றங்களை அவர் சுட்டிக்காட்டினார்.
“அனைத்து பாலினத்தவர்களுக்கும் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் சட்டங்களை நாம் அறிமுகப்படுத்தப் போகிறோம் என்றால், நாம் ஒரு புதிய மசோதாவைக் கொண்டு வர வேண்டியிருக்கலாம்,” என்று அவர் கூறினார். அத்துடன், மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாடாளுமன்ற ஆதரவு இருந்தாலும்கூட, அசல் சட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான வாய்ப்பில்லை எனவும் அவர் கூறினார்.
இத்தகைய சீர்திருத்தங்களை ஊக்குவிக்க அரசாங்கம் பிற வழிமுறைகளையும் பரிசீலித்து வருவதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். “நாங்கள் ஒரு கட்டம் கட்டமான அணுகுமுறையை பின்பற்றலாம். உடனடியாக சட்ட மாற்றங்களை கொண்டுவருவதற்குப் பதிலாக, முதலில் கொள்கை ஆவணங்கள் அல்லது பிற வழிகாட்டுதல்களுடன் தொடங்கலாம்.
ஆரம்ப கட்டங்களில் இவை சட்ட வடிவத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. நமக்குத் தேவை இந்த விடயம் குறித்து ஒரு கலந்துரையாடல் உருவாகுவதுதான்,” என்று சுதர்ஷன விளக்கினார்.
இத்தகைய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டாலும், பாலின சமத்துவ மசோதாவில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை ஆராய ஒரு குழு விரைவில் நியமிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

