வவுனியாவில் கைப்பற்றப்பட்ட கையெறி குண்டுகளுடன் உள்ளூர் தமிழ் அரசியல்வாதிக்கு தொடர்பு!
வவுனியாவின் செட்டிகுளம் பகுதியில் அண்மையில் கைப்பற்றப்பட்ட கையெறி குண்டுகளுக்கும், உள்ளூர் தமிழ் அரசியல்வாதி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல தெரிவித்துள்ளார்.
யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசிய ஒலுகல, கொழும்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கைது ஒன்றுடன் இந்தக் கையெறி குண்டுகளின் கண்டுபிடிப்பு தொடர்புடையது என்றார். அண்மையில், கிரிபத்கொடை பகுதியில் கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், மற்றொரு சந்தேகநபர் செட்டிகுளத்தில் 86 கையெறி குண்டுகளுடன் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் ஒரு உள்ளூர் தமிழ் அரசியல்வாதியின் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் இருப்பதாக அவர் கூறினார். அந்த அரசியல்வாதி நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல என்றும், பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) விசாரணைகளை மேற்கொண்டு வருவதால் அவரது பெயரை தற்போது வெளியிட முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களுடன் அரசியல்வாதியின் தொடர்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதை கண்டறிய மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

