ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளைப் பாதுகாக்க எதிர்க்கட்சி முயற்சி: அரசாங்கம் குற்றச்சாட்டு
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் உண்மைக் குற்றவாளிகளைப் பாதுகாக்க எதிர்க்கட்சி முயல்வதாக அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் ராஜபக்ச அரசாங்கத்தின் நடவடிக்கைகளுடன் இதை ஒப்பிட்டு அவர் பேசினார்.
பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜயதிஸ்ஸ, தாக்குதல்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்புப் படைகளின் தளபதியாக ஜெயசேகர இருந்த காலப்பகுதி இன்னும் விசாரணையில் உள்ளது எனக் கூறிய எதிர்க்கட்சியின் கோரிக்கையை நிராகரித்தார்.
முன்னர் நடந்த பாராளுமன்ற அல்லது ஜனாதிபதி விசாரணைகளின்போது ஜெயசேகரவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும், எதிர்க்கட்சியின் இந்த திடீர் ஆர்வம் “உண்மையான சூத்திரதாரியையும் உண்மையான குற்றவாளிகளையும்” திசைதிருப்பும் முயற்சி என்றும் அவர் கூறினார்.
தாக்குதல் குறித்த முன்கூட்டிய புலனாய்வுத் தகவல்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்கத் தவறியவர்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணைகள் இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

