நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் மாணவி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலையின் அதிபருக்கு தற்காலிகமாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட குறித்த அதிபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
குறித்த பாடசாலையில் பயிலும் மாணவி ஒருவர் அதிபரினால் தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுமியின் சகோதரர் அதிபரால் தாக்கப்பட்டு தூற்றப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து, தமது சகோதரரை தூற்ற வேண்டாம் என சிறுமி அதிபரிடம் தெரிவித்த நிலையில், அவரும் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமியின் அழுகுரல் கேட்டு பாடசாலைக்கு அருகில், பணியாற்றிய நிலையில், பாடசாலைக்கு விரைந்த அவரது தந்தை சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்ததோடு, காவல்துறையில் முறையிட்டிருந்தார்.
இந்த நிலையில், பாடசாலையின் அதிபர் கைதுசெய்யப்பட்டு ஹட்டன் நீதிவான் நீதிமன்றில், முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகேவின் பணிப்புரைக்கு அமைய, குறித்த அதிபருக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.