புத்தளம் – கொழும்பு ரயில் பெட்டியில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை சடலம் மீட்பு
கொழும்புக்கு பயணித்த ரயில் ஒன்றின் பெட்டிக்குள் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சில நாட்களேயான பச்சிளம் குழந்தையின் சடலம் தொடர்பில், கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன திசாநாயக்க முன்னிலையில் தெமட்டகொட பொலிஸார் இன்று கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்துள்ளனர்.
புத்தளத்திலிருந்து கொழும்புக்கு வந்த ரயிலின் கழிவறையை ரயில்வே திணைக்களத்தின் பணியாளர் ஒருவர் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது இந்த சடலத்தை கண்டெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உடனடியாக அவர் தெமட்டகொட பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.
சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில்கொண்ட மேலதிக நீதவான், குழந்தையின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டதுடன், அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பணித்துள்ளார்.

