இலங்கையின் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டத்திற்கு எதிரான அடிப்படை உரிமை மனு தாக்கல்

இலங்கையின் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டத்திற்கு எதிரான அடிப்படை உரிமை மனு தாக்கல்

இலங்கை பிரஜைகளுக்கான டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை (NIC) திட்டத்தை அமுல்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) ரத்து செய்யக் கோரி இலங்கை உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த மனுவை சமூக ஆர்வலர் அமனி ரிஷார்ட் ஹமீத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட மேலும் 27 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 

மனுவின்படி, இந்த விடயம் தொடர்பான இரண்டு அமைச்சரவை தீர்மானங்கள் ஜனவரி 27 மற்றும் ஜூன் 2 ஆகிய திகதிகளில் பொதுமக்களுக்கோ அல்லது பாராளுமன்றத்திற்கோ அறிவிக்கப்படாமல் எடுக்கப்பட்டுள்ளன.

 

மேலும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இலங்கை குடிமக்களின் உயிரியல் தரவு (biometric data) மற்றும் தனிப்பட்ட தகவல்களை இந்தியா அணுக முடியும் என்றும், இது இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட வழிவகுக்கும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இது ஒரு வெளிநாட்டு அரசு இலங்கையின் இறையாண்மை, தேசிய பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தில் தலையிட ஒரு வாய்ப்பை வழங்கும் என்று கூறி, இது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை மீறுகிறது என்றும் மனு சுட்டிக்காட்டுகிறது.

இதன்படி, இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொடர்புடைய அமைச்சரவை தீர்மானங்களை ரத்து செய்யுமாறும், இந்த டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டத்தை அமுல்படுத்துவதைத் தடுக்குமாறும் மனு நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.

Recommended For You

About the Author: admin