ரஷ்ய விமான விபத்து: 49 பேர் இறந்திருக்கலாம் என அச்சம்
ரஷ்யாவின் அமூர் பகுதிக்கு அருகில், டின்டா என்ற நகரத்திற்கு அருகே, அங்காரா என்ற விமான நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று ராடாரில் இருந்து திடீரென மறைந்துவிட்டது. இந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் பயணம் செய்த 49 பேரும் இறந்திருக்கலாம் என பயப்படுகிறார்கள்.
ரஷ்ய அரசின் விமான போக்குவரத்து துறைக்கு சொந்தமான Mi-8 என்ற ஹெலிகொப்டர் தான், முதலில் எரிந்து கொண்டிருந்த விமானத்தின் பாகங்களை கண்டறிந்ததாக அவசரகால அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த சோகமான சம்பவத்தில், 43 பயணிகள், (ஐந்து குழந்தைகள் உட்பட), மற்றும் ஆறு விமான ஊழியர்கள் என மொத்தம் 49 பேர் இருந்ததாக அந்தப் பகுதியின் ஆளுநர் வசிலி ஓர்லோவ் தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான விமானத்தில் ஒரு சீன நாட்டவரும் பயணம் செய்ததாக சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா கூறியுள்ளது.
விபத்து ஏன் நடந்தது என்பது குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது. மோசமான வானிலை காரணமாக விமானி தரையிறங்கும்போது தவறு நடந்திருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.


