ஜோசப்பரராஜசிங்கத்தின் வழக்கு மீண்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது

படுகொலைசெய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் படுகொலை தொடர்பான வழக்கினை மீண்டும் தாக்கல்செய்யவுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

படுகொலைசெய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் புதல்வர் ஜோசப்பரராஜசிங்கம் டேவிட் 20வருடங்களுக்கு பின்னர் மட்டக்களப்புக்கு வருகைதந்த நிலையில் படுகொலைசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராசிங்கத்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன்,பிரதி முதல்வர் டினேஸ் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் இதன்போது கலந்துகொண்டனர்.

புதூர் பகுதியில் உள்ள மயானத்தில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் நினைவுத்தூபியில் அவரின் மகன் மற்றும் பாராளுமுன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர்,பிரதி முதல்வர் சுடர் ஏற்றி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் படுகொலைக்கு நீதிகோரி ஒவ்வொரு வருடமும் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணி போராட்டத்தினை நடாத்திவருகின்றது.

ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் கொலையில் முக்கிய சந்தேகநபராக பிள்ளையான்; நல்லாட்சிக்காலத்திலே கைதுசெய்யப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து அவர் விடுதலைசெய்யப்பட்டார்.

அந்த விடுதலை பல சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது. தென்னிலங்கையில் கூட நீதித்துறையில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் வகையில் அசாத் மௌலானாவின் வாக்குமூலம் இருந்தது.

ஆனால் சட்டமா அதிபர் திணைக்களம் அந்த வழக்கினை தள்ளுபடிசெய்து குற்றவாளி கூண்டிலிருந்து பிள்ளையானை நீக்கியிருந்தார்கள்.

ஆனால் காலம்மாறியிருக்கின்றது. அந்த படுகொலையினை செய்ததாக சந்தேகிக்கப்படும் ராஜபக்ஸ ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் தற்போது ஆட்சியில் இல்லை.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மீண்டும் பிள்ளையான் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்.

பிள்ளையான் கைதானது ஈஸ்டர் குண்டுத்தாக்குதலா அல்லது திரிபொலியுடன் இணைந்து மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் உட்பட ஏனைய கொலைகளைப்பற்றியா என்பது நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஆனாலும் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் சார்பில் அவரின் படுகொலை வழக்கினை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கின்றோம்.

இது தொடர்பான விடயங்கள் சில மாதங்களுக்கு முன்னர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் குடும்பத்தினரின் இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கவேண்டும்.

என்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றார். இங்கு மூடிமறைக்கப்பட்ட,நீதி மறுக்கப்பட்ட பல படுகொலைகளை விசாரணைசெய்யப்படவேண்டும்.

இரு தினங்களுக்கு முன்னர் ஐநா மனித உரிமை ஆணையாளர் வந்தபோது அவர் எங்களிடம் சில விடயங்களை தெரிவித்திருந்தார் அதாவது காணாமல்ஆக்கப்பட்டவர்கள்,படுகொலைசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சி பத்து விடயங்களை முன்வைக்குமாறு கூறியிருந்தார்.

இதன்போது நாங்கள் முதலாவதாக ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் விசாரணையை மீளஆரம்பிக்கவேண்டும்,ரவிராஜ் படுகொலை,திருகோணமலை மாணவர்களின் படுகொலைகள், மாணர்கள் கடத்தப்பட்டமை, இறுதி யுத்த காலப்பகுதியில் நேரடியாக கையளிக்கப்பட்டு காணாமல்போனவர்கள், கொல்லப்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் தொடர்பில் தெரிவித்திருந்தேன்.

இதேபோன்று அனந்தி சசிதரனின் கணவரின் வழக்கு போன்ற பல்வேறுவிடயங்களை தெரிவித்திருந்தேன். நாங்கள் நீதிக்கான போராட்டத்தினை கைவிடமாட்டோம்.

ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரையில் நீதிகோரிய போராட்டத்தினை இலங்கை தமிழரசுக்கட்சி முன்னெடுக்கும் என்பதை அவரின் மகனுக்கு நாங்கள் உத்தரவாதமளிக்கின்றோம் என்றார்.

Recommended For You

About the Author: admin