சாவகச்சேரியில் பிடிபட்ட மணல் மாபியா..!
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மணல் கடத்தல் டிப்பர்கள் அகப்பட்டு வரும் நிலையில் 26/06 வியாழக்கிழமை காலை வேளையும் பொலிஸாரின் சைகையை மீறிச் சென்ற டிப்பர் வாகனம் மற்றும் அதன் சாரதியை சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் மூன்று மணல் கடத்தல் டிப்பர்கள் மணலை நிரப்பிக் கொண்டு சென்ற வேளையில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று டிப்பர்களை மறித்துள்ளனர்.
இருப்பினும் பொலிஸாரின் சைகையை மீறி டிப்பர் வாகனங்கள் பயணித்துள்ளன.இந்நிலையில் பொலிஸார் நீண்ட தூரம் டிப்பர் வாகனம் ஒன்றை பின் தொடர்ந்து ஏ9 வீதி நுணாவில் பகுதியில் வைத்து டிப்பர் வாகனத்தை மடக்கிப் பிடித்து அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.
இதன்போது மற்றைய இரண்டு டிப்பர்களும் தப்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சாரதியிடம் சாரதி அனுமதிப்பத்திரமும் இல்லை எனப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
சாவகச்சேரிப் பொலிஸார் இவ்வாரம் மாத்திரம் பத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத மணல் கடத்தல் டிப்பர்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


