மூதூர் பிரதேச சபையின் தவிசாளராக பிரகலாதன், உப தவிசாளராக மொஹமட் பைசர் தெரிவு..!

மூதூர் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழரசுக் கட்சி 5 மேலதிக வாக்குகளால் கைப்பற்றியுள்ளதுடன் தவிசாளராக செல்வரெத்தினம் பிரகலாதன், உப தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மொஹமட் பைசர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவிற்கான அமர்வு இன்று திங்கட்கிழமை (23) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் தலைமை தாங்கும் அதிகாரியுமான அஸ்மி ஆதம்லெப்பை தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தவிசாளர் பதவிக்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி செல்வரெத்தினம் பிரகலாதன் என்பவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரல் முன்மொழிந்தது. அதேநேரம் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் முகம்மது றிபான் என்பவரை அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் முன் மொழிந்திருந்;தது.

இந்நிலையில் குறித்த தெரிவு பகிரங்க வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது தமிழரசுக்கட்சி உறுப்பினர் செல்வரெத்தினம் பிரகலாதனுக்கு ஆதரவாக தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் 5பேர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 4பேர், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 2 பேர், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி 1, தேசிய காங்கிரஸ் உறுப்பினர்-1 உட்பட 13 பேர் வாக்களித்திருந்தனர்.

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் முகம்மது றிபானுக்கு ஆதரவாக அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் – 3 பேர், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 3 பேர், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி–1, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி – 1, உள்ளிட்ட 8 பேர் வாக்களித்தனர்.

இந்நிலையில் சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவர் வெளிநடப்பு செய்திருந்தார்.

அந்தவகையில் 5 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்ற தமிழரசுக் கட்சி உறுப்பினர் செல்வரெத்தினம் பிரகலாதன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பிச்சைத்தம்பி மொஹமட் பைசர் உபதவிசாளராக ஏகமனமாக தெரிவு செய்யப்பட்டார்.

பெருமளவான முஸ்லீம் சகோரரர்களின் ஆதரவுடனும், விட்டுக் கொடுப்புடனும் மூதூர் பிரதேச சபையில் சுமார் 30 வருடங்களுக்குப் பின்னர் தமிழர் ஒருவர் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இது இன நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு என மக்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin