பிறந்த தனது சிசுவை 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்த தந்தை

பிறந்து ஏழு நாட்களேயான சிசுவை 50,000 ரூபாய்கு வாங்கிய பெண்ணொருவரும் இடைத்தரகராக செயற்பட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, சட்டவிரோத உறவினால் பிறந்ததாக கூறப்படும் சிசு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரசவித்த பின்னர் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டதுடன் சிசுவின் தந்தைக்கும் தாய்க்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்பின்னர், அநுராதபுரம், மல்வத்து ஒழுங்கையை சேர்ந்த 21 வயதுடைய சிசுவின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சிசு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கபிதிகொல்லேவ வஹல்கட பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவரும், சம்பவத்துக்கு இடைத்தரகராக செயற்பட்ட அநுராதபுரத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவருமே கைது செயய்ப்பட்டுள்ளனர்.

மேலும், தந்தையே சிசுவை விற்பனை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் தற்போது அவர் பிரதேசத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாயின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே சிசு மீட்கப்பட்டுள்ளதுடன், சிசுவை விற்பதற்கு வைத்தியசாலையின் தாதி மற்றும் உதவியாளர் உதவியிருக்கலாம் என்றும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Recommended For You

About the Author: webeditor