
இந்தியாவைக் கடந்து இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடு வராது எனவும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் வெளியேற்றம் சர்வதேச முதலீட்டாளருக்கு இலங்கை குறித்த எதிர்மறை செய்தியைக் கொண்டு சென்று விட்டது எனவும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அதானி கிரீன் எனர்ஜி-ஸ்ரீலங்கா மீள் சக்தி பெருந்திட்டம் குறித்து நாடாளுமன்றில் கருத்துத் தெரிவித்த போதே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”அதானி கிரீன் எனர்ஜி-ஸ்ரீலங்கா மீள் சக்தி பெருந்திட்டம், இலங்கைக்கு மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமல்ல எனவும், அது மேலதிக மின்சக்தியை இந்திய மின் சுற்றுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தை கொண்ட திட்டமாகும் எனவும், அதற்காக இலங்கை-இந்திய மின் சுற்றுகள் இணக்கப்பட இருந்தன எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இப் பெருந்திட்ட மின் உற்பத்தி கட்டமைப்பு மற்றும் இந்திய சுற்றுடனான தொடர்பு இணைப்பு ஆகியவற்றை அமைக்கும் மற்றும் பராமரிக்கும், பாரிய பொறுப்புகளை அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம்தான் ஏற்று இருந்தது எனவும், அதை புரிந்துகொள்ள இன்றைய இலங்கை அரசு தவறி விட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது அதானியை இலங்கை அரசு வெளியேற்றவில்லை எனவும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம்தான் இலங்கையை விட்டு வெளியேறி விட்டது எனவும் தெரிவித்த மனோ கணேசன், இச்சம்பவம் இன்று இலங்கை நோக்கி வரக்கூடிய சர்வதேச முதலீட்டாளருக்கு எதிர்மறை செய்தியை கொண்டு சென்றும் விட்டது எனவும், தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை-இந்திய மின் சுற்று மூலம், இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் இலங்கை மின்சாரம் இலங்கைக்கு கொண்டு வரும் வருமானம் மூலம் இலங்கையில் மின்சார கட்டணங்களை குறைக்க முடியும் எனவும், எதிர்காலத்தின் மீது கண் வைத்து தீர்மானம் எடுக்க இலங்கை அரசு தவறிவிட்டது எனவும், அதானியின், யூனிட் விலை தொடர்பில் பிரச்சினை இருக்கும் போது, அதை பேசி தீர்த்து இருக்கலாம் எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாது இலங்கைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்காளர்களுடன்தான் வருவார்கள் எனவும், மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கையை நோக்கி முதலீட்டாளர்கள், இந்தியா விட்டு இங்கு வருவார்கள் என ஆட்சி யாளர்கள் நினைக்கின்றார்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது