STF கட்டளை அதிகாரி வருண ஜயசுந்தர; அஜித் ரோஹண இடமாற்றம் – பொலிஸ் முக்கிய பதவிகளில் இடமாற்றம்

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) சட்டத்தரணி வருண ஜயசுந்தர, கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான SDIG அஜித் ரோஹண உள்ளிட்ட பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் (SDIG), பிரதிப் பொலிஸ் மாஅதிர்பகள் (DIG) உள்ளிட்ட 12 பேர் இதில் உள்ளடங்குகின்றனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, பெப்ரவரி 12 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றங்கள் அமுலுக்கு வருவதாக, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) சட்டத்தரணி வருண ஜயசுந்தர கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதற்கமைய, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.ஜி.எஸ். சமந்த டி சில்வா பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண, வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, பல்வேறு பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் (OIC) இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, பொலிஸ் பொறுப்பதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்படும் இடமாற்றத்தின் அடிப்படையில் வழக்கமான பணிகளில் ஈடுபட வேண்டுமென இதில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin