வட, கிழக்கில் நாளை ஆர்ப்பாட்டங்கள்: தடை விதித்த நீதிமன்றம்

வட, கிழக்கில் நாளை ஆர்ப்பாட்டங்கள்: தடை விதித்த நீதிமன்றம்

மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுதந்திர தினமான நாளையன்று, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழு பேருக்கு, நீதிமன்றம் தடையுத்தரவு விதித்துள்ளது.

மட்டக்களப்பு தலைமைய பொலிஸாரினால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இதற்கான தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

இலங்கை குடியரசின் தேசிய தினம் (04-02-2025) அன்று கொண்டாடப்படவேண்டியது என இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பில் 08வது சரத்தில் கூறப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் காந்தி பூங்காவில் நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வினை பாதிக்கும் வகையிலான எந்தவொரு ஆர்ப்பாட்டத்தினையோ எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளையோ, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்று நியாயாதிக்கத்துக்கு உட்பட்ட எந்தவொரு பகுதியிலும் மேற்கொள்ளக்கூடாதென, குறித்த ஏழு பேரின் பெயர் குறிக்கப்பட்டு தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவர் அ.அமலநாயகி, செயலாளர் சுகந்தினி, அரசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன், சிவில் சமூக செயற்பாட்டாளர் இ.செல்வகுமார் ஆகியோருக்கு இந்த தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, தமிழர்களுக்கான உரிமையினை வலியுறுத்தி இலங்கையின் சுதந்திர தினத்தினை கரிநாளாக அனுஸ்டித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வடகிழக்கில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

நாளைய தினம் மாபெரும் பேரணிக்கும் போரராட்டத்திற்கும் மட்டக்களப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் இதில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொள்வதற்காகவுள்ளனர்.

இதேநேரம் ஜனநாயகத்தினை பாதுகாக்கப்போவதாக கூறி ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமும் ஜனநாயகத்தினை குழிதோண்டி புதைக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்துள்ளதாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நாட்டில் ஒவ்வொரு பிரஜைகளுக்கும் தமது உரிமைக்காக போராடும் உரி;மையிருக்கும்போது தமிழர்களுக்கும் மட்டும் அந்த உரிமையினையும் மறுக்கும் செயற்பாடுகளையே இந்த நாட்டில் ஆட்சியமைக்கும் அதிகாரங்கள் iகெயிலெடுத்துவருவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin