இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கரில் கஞ்சாவை பயிர் செய்வது தொடர்பான யோசனையை சுகாதார அமைச்சு அமைச்சரவையில் முன்வைக்க உள்ளது. சுகாதார அமைச்சின் ஊடாக சுதேச வைத்தியத்துறை ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இந்த யோசனையை முன்வைக்க உள்ளார்.
இந்த யோசனை எதிர்வரும் 5 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்பட உள்ளது.
மேற்குல நாடுகளில் கஞ்சாவுக்கு இருக்கும் மிகப் பெரிய சந்தை வாய்ப்பு
மேற்குலக நாடுகளின் சந்தைகளில் கஞ்சாவுக்கு மிகப் பெரிய கேள்வி நிலவுவதாகவும் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் நிலைமையில் கஞ்சாவை ஏற்றுமதி செய்வது வெளிநாட்டு வருமானத்தை ஈட்ட சிறந்த வழியாக இருக்கும் என ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சட்டவிரோதமாக பயிரிடப்படும் கஞ்சா
இலங்கையில் பல இடங்களில் சட்டவிரோதமாக ஏற்கனவே கஞ்சா பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. எனினும் அவை போதைப் பொருளாக பயன்படுத்துவதற்காகவே பயிரிடப்படுகின்றன.
கஞ்சா சேனைகளை பாதுகாப்பு தரப்பினர் கண்டுபிடித்து அழித்து வருகின்றனர். மேலும் சித்த மருத்துவம் போன்ற சுதேச மருத்துவ தேவைகளுக்காக இலங்கை கஞ்சாவை இறக்குமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.