கல்முனையில் அனுமதியற்ற கட்டுமானம் : எழு நாட்களுக்குள் அகற்ற மாநகர சபை உத்தரவு

கல்முனையில் அனுமதியற்ற கட்டுமானம் : எழு நாட்களுக்குள் அகற்ற மாநகர சபை உத்தரவு – அபிவிருத்தி குழுத்தலைவர் மௌனம் !

கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவையால் எதிர்வரும் 19ம் திகதி (19.01.2025) ஞயிற்றுக்கிழமை கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட உள்ளதாகவும் அந்த திறப்பு விழாவுக்கான அழைப்பிதழில் கல்முனை மாநகரசபை ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி கௌரவ அதிதியாக கலந்து கொள்ள உள்ளதாகவும் அச்சிடப்பட்டிருந்த நிலையில் கல்முனை மாநகர சபையினால்
கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்திப் பேரவை செயலாளருக்கு முகவரியிட்டு நேற்று (17.01.2025) வெள்ளிக்கிழமை “கல்முனை கல்லடிக்குளப் பிரதேசத்தில் அனுமதியற்ற கட்டுமானம் என்ற தலைப்பில் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் எமது KMC/Eng/App/2023 ஆம் இலக்க 2023.04.25 ஆம் திகதிய மற்றும் KMC/WD/COMP/10 ஆம் இலக்க 2023.09.07 ஆம் திகதிய கடிதங்களுக்கு மேலதிகமாக, தாங்கள் மேற்படி இடத்தில் கட்டுமானம் ஒன்றை மேற்கொண்டுள்ளமையும், சிலை ஒன்றை அமைத்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த கட்டுமானம் மற்றும் சிலை வைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக கல்முனை பிரதேச செயலகத்திலிருந்து காணி தொடர்பான அனுமதிப்பத்திரத்தினையும், கல்முனை மாநகர சபையினூடாக நிர்மாணத்தினை மேற்கொள்வதற்குரிய அனுமதியினையும் பெற்ற பின்னரே குறித்த குறித்த காணிக்குள் நிர்மாண வேலைகளை மேற்கொள்ளுமாறு ஏற்கனவே மேற்குறித்த கடிதங்கள் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

ஆகவே இவ்வறிவுறுத்தல் கிடைக்கப்பெற்று ஏழு (7) நாட்களுக்குள் தங்களால் அனுமதியின்றி செய்யப்பட்ட நிர்மாண வேலைகளை அகற்றி ஆதனத்தினை முன்பிருந்த நிலைக்குக் கொண்டுவருமாறு வேண்டப்படுகின்றீர். தவறும் பட்சத்தில் தங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்பதனை அறியத்தருகின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிலை திறப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக அம்பாறை அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை அமைந்துள்ள காணி குத்தகை முறையான விதத்தில் இல்லையென்றும் அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள நிர்மாணிப்புக்கள் அனுமதியில்லாத முறையற்ற விதத்தில் அமைந்துள்ளமை தொடர்பில் கல்முனை மாநகர சபை பலமுறை கடிதம் அனுப்பியும் அவை பொருட்படுத்தப்படாமல் நடைபெற்ற விடயம் எனவும் சமூக செயற்பாட்டாளர்களிடமிருந்து விமர்சனங்கள் எழுந்து வண்ணம் இருக்கும் நிலையில் இப்போது இந்த விடயம் பேசுபொருளாக மாறியுள்ளது.

கடந்த காலங்களில் பல்வேறு அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களிலும் பேசுபொருளாக மாறியிருந்த இந்த விடயம் தொடர்பில் இப்போது முரண்பாடான நிலை தோன்றியுள்ள போதிலும் கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் இந்த விடயத்தில் மௌனம் காத்துவருவது பொதுமக்களுக்கு கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் மீது பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. மட்டுமின்றி சமூக செயற்பாட்டாளர்களிடமிருந்து பிரதேச அரசியல்வாதிகளுக்கு இந்த விடயம் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டும் யாரும் இந்த விடயம் தொடர்பில் அக்கறை செலுத்தாமை வருத்தமளிக்கிறது என கல்முனையை சேர்ந்த கல்விமானும் சமூக செயற்பாட்டாளரும் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin