ஹட்டன் பஸ் சாரதி தூக்கி வீசப்பட்டதற்கான காரணம் வெளியானது!
கடந்த 21ஆம் திகதியன்று, ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது, மல்லியப்பூ பகுதியில் வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்த தனியார் பஸ், நுவரெலியா மாவட்ட மோட்டார் பரிசோதகரால் இன்று (23) பரிசோதிக்கப்பட்டது.
விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி கதவுப் பூட்டு பழுதடைந்திருந்தமையும் இதனால்தான் திடீரென அந்தக் கதவு திறக்கப்பட்டு, பஸ்ஸின் சாரதி தனது இருக்கையிலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள பஸ், பிரதான மோட்டார் வாகன பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டது.
மேற்படி பஸ்ஸின் சாரதி கதவுப் பூட்டு, சில காலமாகவே பழுதடைந்த நிலையில் செயலிழந்திருந்ததால், அந்தக் கதவு தானாகத் திறக்கப்பட்டுள்ளது என்றும் அந்தக் கதவை தற்காலிகமாக மூடுவதற்கான முறைமையொன்றே பின்பற்றப்பட்டுள்ளது என்றும், சோதனையின் போது தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த பஸ்ஸின் சாரதி, பாதுகாப்பு பெல்ட் அணியாதிருந்ததுடன், பஸ்ஸுக்குள் பல வெள்ளை இரும்புச் சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்ததால் தான், விபத்தின் போது பயணிகள் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர் என்றும் தெரியவந்துள்ளது. இதனால், 3 பேர் உயிரிழந்ததோடு 50 பேர் காயமடைந்தனர்.
மேலும், பஸ்ஸின் இருக்கைகள் தரமான முறையில் பொருத்தப்படாததால், அனைத்து இருக்கைகளும் கழன்று விழுந்து ஒன்றுடன் ஒன்று மோதியதில், பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மோட்டார் வாகன பரிசோதகரால் பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் போக்குவரத்து வாகனங்களில், துணைக்கருவிகளை நிறுவ அனுமதிக்கக் கூடாது. மேலும், அவ்வாறு நிறுவப்பட்ட சாதனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளிடம் தலைமை மோட்டார் வாகன ஆய்வாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
போக்குவரத்துக்கு உகந்ததல்லாத பஸ்ஸை இயக்கியமை தொடர்பில், பஸ்ஸின் உரிமையாளருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.