ஜன. 1இல் மின் கட்டணம் குறித்த இறுதி அறிக்கை
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவது தொடர்பான வாய்மூல அமர்வுகள், எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த அமர்வுகளில், மின்சார சபை சமர்ப்பித்த முன்மொழிவு மற்றும் கட்டண திருத்தம் தொடர்பாக, பொது பயன்பாட்டு ஆணைக்குழு சமர்ப்பித்த எதிர் முன்மொழிவு குறித்து பொதுமக்களின் கருத்துக்கள் எடுக்கப்பட உள்ளன.
இலங்கை மின்சார சபை, அடுத்த 6 மாதங்களுக்கு கட்டண திருத்தம் செய்யப்படக்கூடாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிவுகளை அண்மையில் சமர்ப்பித்திருந்தது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர் பிரேரணைகளை முன்வைக்கும் போது, மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.
இந்த முன்மொழிவுகள் தொடர்பில் எழுத்துமூலம் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை, கடந்த 17ஆம் திகதி ஆரம்பமானதுடன், வாய்மூல அமர்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதியன்று கண்டி பிரதேசத்தில் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாய்மொழி மூலமும் எழுத்து மூலமும் கருத்துகளைப் பெற்ற பின்னர், ஜனவரி 17ஆம் திகதி தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.